முகப்பு /தேனி /

தொட்டி பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்.. 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பது எப்போது?

தொட்டி பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்.. 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பது எப்போது?

X
தேனி

தேனி - தொட்டி பாலம் சீரமைப்பு.. 1

Theni Thotti Palam : தேனி மாவட்டம் 18-ம் கால்வாய் நீர்வழி பாதையில் உள்ள தொட்டிப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு தொட்டி பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீரை பிரித்து, போடி, தேவாரம் ஆகிய பகுதியில் பாசன வசதி பெறுவதற்காக, 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த கால்வாய் மூலம் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி, நிலத்தடிநீர் பெருகுவதோடு, நேரடியாக 4, 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் லோயர்கேம்ப் அருகே உள்ள தலை மதகில் இருந்து மானாவரி பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், 18 ம் கால்வாயில் அதிக தண்ணீர் சென்றது. கம்பம் பகுதியில் இருந்து தேவாரம் பகுதிக்கு செல்லும் 18ஆம் கால்வாய் பகுதியின் நீர் வழித்தடத்தில், கம்பம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொட்டிப்பாலம் உள்ளது. இந்த தொட்டிப் பாலத்தின் வழியாகவே 18ம் கால்வாய் நீர் கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் பகுதிக்குச் செல்லும்.

தேனி - தொட்டி பாலம் சீரமைப்பு..

உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 18ம் கால்வாயில் தண்ணீரோடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காட்டாற்று வெள்ளம் கால்வாயில் கலந்த மழை வெள்ளம், 18ஆம் கால்வாய் வழித்தடத்தில் ஓடியது. இதனால் 18-ம் கால்வாய் நீர் வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கினால் கம்பம் அருகே உள்ள தொட்டி பாலம் உடைந்து வெள்ள நீர் அடித்துச் சென்றது.

தேனி - தொட்டி பாலம் சீரமைப்பு..

இதனால் 18ம் கால்வாய் வழித்தடத்தில் நீர் நிறுத்தப்பட்டது. தேவாரம் பகுதியில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பாததால் கடந்த ஆண்டு மானாவாரி விவசாயிகள் சரியாக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

பராமரிப்பு பணிகள் துவக்கம் :-

உடைந்த தொட்டி பாலம் பல மாதங்களாகியும் சரி செய்யப்படாமல் இருந்ததால் விவசாயிகள்  மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முறையிட்டு வந்தனர். முல்லைப் பெரியாற்றில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு விட்டது. தொட்டிப் பாலம் சரி செய்யப்பட்டால் தான் கோம்பை, பண்ணைப்புரம், போடிநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள்.

தேனி - தொட்டி பாலம் சீரமைப்பு..

இது குறித்து பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணனிடம், " பொதுப்பணித் துறையினர் விரைந்து பதினெட்டாம் கால்வாய் உடைந்த தொட்டி பாலத்தை சரி செய்யவில்லை என்றால் போடிநாயக்கனூர் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 35 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்படும் எனவும், நிலத்தடி நீர் வற்றி போகும் எனவும், கால்நடைகள் முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்படும் எனவும் குறிப்பாக போடிநாயக்கனூர் பகுதி முற்றிலும் பாலைவனமாக மாறும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.

பணிகள் குறித்து ஆய்வு :-

அதன் அடிப்படையில், கம்பம் அருகே மழை வெள்ளத்தில் சேதமடைந்த 18ம் கால்வாய் பாலம் சீரமைக்கும் பணி ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியால் சேதமடைந்த பாலம் சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கி உள்ளது. இந்த பணிகள் நடைபெறுவதை எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கீடு மேலும் பெற்றுத் தருவதாகவும், பணிகள் தரமாக நடக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வில் மஞ்சளாறு கோட்ட செயற்பொறியாளர் சுகுமாறன், விவசாயிகள் பங்கேற்றனர்.

தொட்டி பாலம் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்..

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீண்ட நாட்களாக சீர் செய்யப்படாமல் இருந்த தொட்டிபலம் தற்போது சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இடிந்த தொட்டிபலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் திறக்கப்படும் என்று கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தெரிவித்துள்ள நிலையில், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்தாண்டு போடிநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் நன்றாக செய்ய முடியும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர். மேலும் 0 பாயிண்ட் முதல் போடிநாயக்கனூர் வரை உள்ள கால்வாய் வழித்தடத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யவும், முட்புதர்களை அகற்றவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Farmers, Local News, Mullai Periyar Dam, Theni, Vaigai