Home /theni /

தெருக்களில் காலணி தைக்கும் தொழிலாளர்களின் துயர வாழ்க்கை - ஒரு பார்வை

தெருக்களில் காலணி தைக்கும் தொழிலாளர்களின் துயர வாழ்க்கை - ஒரு பார்வை

செருப்பு

செருப்பு தைக்கும் தொழிலாளர் 

Theni District: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இன்றளவும் பல இடங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் தங்களின் தொழிலை கை விடாமல் செய்து வருகின்றனர்.

    சாலையோரங்களில் தென்படும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஊரடங்கு காலம் முடிந்த பின்னரும் கூட மீண்டெள இயலாமல் உள்ளதால் மிகவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

    செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் :-


    இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் தமிழகத்தின் நலிவடைய தொடங்கின. தொற்று காலம் முடிவடைந்த பின்னரும் கூட பலரது வாழ்வாதாரம் இன்றளவும் மீண்டு வராமலேயே உள்ளது. குறிப்பாக சாலையோரங்களிலும், கிடைக்கும் இடத்திலும் தொழில் செய்துவரும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து உள்ளது.

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இன்றளவும் பல இடங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் தங்களின் தொழிலை கை விடாமல் செய்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் ஏறிவரும் விலைவாசி உயர்விற்கு இடையே சாமானியர்கள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், செருப்பு தைக்கும் தொழிலாளர்களும் விலைவாசி ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போதைய காலகட்டத்தில் செருப்பு அறுந்து விட்டால் அதனை தைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் நிலை மாறி ஒரு முறை செருப்பு அறுந்து விட்டால் குறைந்த விலைக்கே புதிய காலனி சந்தையில் உள்ளதால் வேறு காலணியை வாங்கி பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். இதனால் அறுந்த காலணியை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த அளவிலான மக்களே தற்போதும் காலணி அருந்துவிட்டால் அதனை தைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் தன்மை உள்ளதாக கூறுகின்றனர் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்.

    செருப்பு தைக்க ஒருவரிடம் கூடுதலாக ஐந்து அல்லது பத்து ரூபாய் கேட்டால் கூட செருப்பு தைக்காமல் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் குறைந்த விலைக்கு தொழில் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், " தினசரி மூன்று அல்லது நான்கு நபர்கள் செருப்பு தைக்க வருவதே அரிது. தற்போது தோல் செருப்புகளை யாரும் அணிவதில்லை. தற்போது அனைத்தும் யூஸ் அண்ட் த்ரோ செருப்பு களாக உள்ளதால் செருப்பு அறுந்து விட்டால் வேறு செருப்பை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர். தினசரி 200 அல்லது 250 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்களில் அதுவும் கூட கிடைக்காது. வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி பிள்ளைகளை நல்ல இடத்தில் கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறோம் என்றனர்.

    அரசு தங்களுக்கு ஏதேனும் வகையில் உதவிட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது...!!

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி