தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கம்பம் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலசாமி பகுதியில் செயல்பட்டு வரும் மைக்ரோ உரக்கிடங்கின் பின்புறத்தில் 75 லட்சம் மதிப்பீட்டில், குப்பைகளிலிருந்து பயோகேஸ் உற்பத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றது.
கம்பம் நகரில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி, இறைச்சி போன்ற கழிவுகளிலிருந்தும், மற்ற இதர கழிவுகளிலிருந்தும் பயோ-கேஸ் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பயோ-கேஸிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு , நந்தகோபாலசாமி நகரில் அமைய உள்ள பூங்காவிற்கு மின்சாரம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பம் நகராட்சியில் குப்பை கழிவுகளை உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கூடமையங்கள்ஆங்கூர்பாளையம்சாலை, நந்தகோபாலன்நகர், டி.எஸ்.கே.நகர் ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டது. நான்காவது இடமான வாரச்சந்தை திடலில் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது. இதில் ஆங்கூர்பாளையம் மற்றும் நந்தகோபாலன் நகரில் உள்ள மையங்களில் நுண்ணுயிர் உரம் திட வடிவமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
கம்பம் நகரில் சேகரிக்கும் குப்பை அதிக அளவில் சேர்வதாலும், மாற்றுப்பயன்பாடான நுண்ணுயிர் உரத்தை வாங்க விவசாயிகள் தயக்கம் காட்டுவதால் நகராட்சி நிர்வாகத்தினர் மாற்று திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர்.
இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கார்பன் லூப்ஸ் நிறுவனத்தினர் குப்பை கழிவிலிருந்து மின்சார உற்பத்தி செய்து, அதை உள்ளூர் பயன்பாட்டிற்கே பயன்படுத்தலாம் என்ற திட்டத்தை விளக்கினர். அதன்படி ரூபாய் 75 லட்சம் மதிப்பில் பயோ கேஸ் பிளான்ட் அமைக்கப்பட்டு மின்சார உற்பத்தி நடைபெற்று அதை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
செயல்முறை :-
நகரில் சேகரிக்கும் குப்பை கழிவில், மக்கும் குப்பை தனியாக பிரிக்கப்பட்டு, பயோ கேஸ் பிளான்டில் உள்ள அரவை இயந்திரத்தில் கொட்டப்பட்டு, கன்வேயர் பெல்ட் மூலம் மக்கும் குப்பையான காய்கனி, வீணான உணவு பொருள்களுடன்தண்ணீர்
சேர்க்கப்பட்டு, அரவை இயந்திரம் மூலம் கூழாக அரைக்கப்படுகிறது. அதில் நுண்ணுயிர் செலுத்தப்பட்டு அருகில் உள்ள பெரிய ராட்சத கொள்கலனில் சேர்க்கப்படுகிறது.
கொள்கலனில் சென்றதும் நுண்ணுயிர் அதிக அளவில் உணவை உண்டு இறக்கிறது. அதிலிருந்து எச். 2 . எஸ் என்ற கந்தகம் கலந்த வாயு உருவாகிறது, அது வெளியேறினால் தீ பற்றும் என்பதால், அருகில் உள்ள பில்டரில் வாயுவை செல்கிறது, அங்கு கந்தகம்
மற்றும் மீத்தேன் வாயு பிரிக்கப்பட்டு, மீத்தேன் வாயு குழாய் மூலம் பயோ கேஸ் பிளான்ட் மின்னாக்கிக்கு செல்கிறது.
மின்னாக்கி மீத்தேன் வாயுவை மின்சாரமாக்குகிறது, அந்த
மின்சாரம் மூலம் அரவை இயந்திரம், அருகே உள்ள எம்.சி.சி மைய அரவை இயந்திரம், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவைகள் இயக்க வைக்கப்படுகின்றன.
உள்ளூர் மின்சார தேவை பூர்த்தி :-
இது குறித்து கார்பன் லூப்ஸ் நிறுவன மேலாளர் ஆல்வின் கூறுகையில், " நாள்தோறும் 2 ஆயிரம் கிலோ குப்பை கழிவை அரைத்து 200 கியூபிக் மீட்டர் மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது, இதன் மூலம் 20 மணி நேரத்திற்கு மின்சாரம் கிடைக்கும், பகல் பொழுதில் பயோ கேஸ், எம்.சி.சி. மையத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்தியும், இரவு நேரங்களில் நந்தகோபாலன் நகர் உள்ளிட்ட சுமார் 200 தெரு விளக்குகளுக்கு மின்சாரம் பயன்படும் அளவில் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்றார்.
இயற்கை உரம் :-
இதுகுறித்து கம்பம் நகர் மன்றத்தலைவர் வனிதா நெப்போலியன் கூறுகையில், " கம்பம் நகராட்சி பகுதிகளில் பயோ கேஸ் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மின்சார உற்பத்தி போக குப்பை கழிவு திரவ உரப்பொருளாகிறது. இது முற்றிலும் இயற்கை உரமாகும். இந்த திரவ உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது, தேவையான விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம், நகராட்சிக்கு மின்சார செலவை குறைக்கும் வகையில் நகரின் மற்ற இடங்களிலும் பயோ கேஸ் திட்டத்தை செயல்படுத்தயும், குப்பை மாசில்லா நகரமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நகராட்சியின் இந்த திட்டத்தை கம்பம் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.