ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.
பேரறிவாளன் விடுதலையை பலரும் கொண்டாடி வரும் நிலையில் ஏழு பேர் விடுதலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரவர்களது இடங்களில் வாயை வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தவேண்டும் என அறிவித்திருந்தார்.
கருத்து வேறுபாடுகளுக்கு கொலை தீர்வாகாது :-
அதன்படி இன்று தமிழகத்தில் காங்கிரஸ் சார்பாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டத்திலும் பேரறிவாளன் விடுதலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி அமைதி போராட்டம் நடத்தினர்.
பேரறிவாளன் விடுதலையை கண்டிக்கும் விதமாக தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் வாயில் வெள்ளைத் துணியை கட்டி, " கருத்து வேறுபாடுகளுக்கு கொலை தீர்வாகாது வன்முறையை எதிர்ப்போம்" என்ற பதாகைகளை கையில் ஏந்தி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி வழிப் போராட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.