தேனி மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அகல ரயில் பாதை திட்டத்திற்காக நிறுத்தப்பட்ட ரயில் சேவையானது, பணிகள் முடிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இன்று முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததில், முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இன்று முதல் தேதி வரை இன்று முதல் தினசரி ரயில் இயக்கப்பட்டது. தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டத்தை பிரதமர் நரேந்திர
மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இன்று முதல் தேனி மற்றும் மதுரை வரையிலான ரயில் சேவை தொடங்கியதில், முதல்நாள் ரயிலில் பயணம் செய்த பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தேனி மாவட்டத்திற்கு ரயில் வருவதை தொடர்ந்து தேனி மாவட்ட மக்கள் மலர் தூவியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிலையில் தேனி - மதுரை இடையே ரயிலை இயக்கி வந்துள்ளார் ரயில் ஓட்டுனர் வெங்கடேஷ்வரன். 15 வருடங்களாக ரயில்வே துறையில் இவர் பணியாற்றி வருகிறார். இதில் 12 ஆண்டுகாலமாக மதுரை மண்டல ரயில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். மதுரை மண்டலத்தில் இருந்து திருநெல்வேலி, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ரயிலை இயக்கி பன்னிரண்டு கால ஆண்டு அனுபவம் கொண்டவராக உள்ளார்.
பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு மதுரை - தேனி இடையே ரயில் இயக்கப்பட்டாலும் புதிய ரயில்வே டிராக் என்பதால் மிகுந்த கவனத்துடன் மிதமான வேகத்திலேயே ரயிலை இயக்கி முதல் நாளான இன்று மதுரை டூ தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்கியுள்ளார்.
இதுகுறித்து ரயில் ஓட்டுனரான வெங்கடேஸ்வரன் கூறுகையில், " பனிரெண்டு ஆண்டு காலமாக மதுரை மண்டலத்தில் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய பூர்வீகம் சின்னமனூர் தான். உயர் அதிகாரியிடம் என்னுடைய விருப்பத்தின் பேரில் கேட்டு மதுரை - தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்குகிறேன். முதல் நாளான இன்று ரயிலை மிதமான வேகத்திலேயே இயக்கி வந்தேன். தேனி மாவட்ட மக்கள், இந்த ரயிலுக்கும் ரயில் ஓட்டுனரான எனக்கும் அளித்த வரவேற்பு குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை” என்றார் நெகிழ்ச்சியாக ...
மேலும் தேனியில் இருந்து சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு ரயில் இயக்க வாய்ப்பு உள்ளது. தேனி மதுரை இடையே இரண்டு மூன்று முறை சுழற்சி முறையில் ரயில் இயக்கவும் வாய்ப்பு உள்ளது என்றார் வெங்கடேஸ்வரன்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.