Home /theni /

இந்திய மாற்றுத்திறனாளி கால்பந்து அணி கேப்டனின் பரிதாப நிலை.. ‘கை’கொடுக்குமா தமிழக அரசு?

இந்திய மாற்றுத்திறனாளி கால்பந்து அணி கேப்டனின் பரிதாப நிலை.. ‘கை’கொடுக்குமா தமிழக அரசு?

Balamurugan 

Balamurugan 

Theni District: கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு போட்டிகள் இல்லாததால், இந்திய மாற்றுத்திறனாளி கால்பந்து அணி முடங்கி உள்ளது என்றும் வீரர்கள் வறுமையின் விளிம்புக்கே சென்று விட்டதாகவும் கூறுகிறார், தேனியைச் சேர்ந்த  இந்திய மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணியின் கேப்டன் பாலா

மேலும் படிக்கவும் ...
    தேனி மாவட்டம் கோட்டூரில் வசித்து வருகிறார் 27 வயதாகும் இந்திய மாற்றுத்திறனாளி கால்பந்து அணியின் கேப்டனான பாலா. இவருக்கு பிறந்ததில் இருந்தே ஒரு கை இல்லாமல், குறைபாடு இருந்துள்ளது . இதனால் சோர்வு அடையாத இவர் தனக்குள் இருந்த கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே கால்பந்து பயிற்சி பெற்றுள்ளார். பள்ளியில் தனது விளையாட்டு பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இந்திய மாற்றுத்திறனாளி கால்பந்து அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். சிறு வயதில் இருந்தே பல போட்டிகளில் விளையாடி நூற்றுக்கணக்கான கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார் பாலா.

    இளம் வயதில், ஊருக்கு அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக வெறும் தோல்வியை மட்டுமே சந்தித்த அந்த அணி, பாலா அளித்த பயிற்சிக்கு பின்னர் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஏழ்மையில் தவிக்கும் வீரர் :-

    ஆரம்பகட்டத்தில் தனது நண்பர்கள் மூலமே உதவி கிடைத்ததும் என்றும், தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல போதிய உதவி இல்லாமல் தவிப்பதாக கூறுகிறார் பாலா. கடின உழைப்பின் மூலம் இந்திய மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு நேபாளத்தில் நடைபெற்ற சவுத் ஆசியன் ஃபுட்பால் லீக் ஆட்டத்தில் பங்கு பெற்று வெற்றியும் பெற்று தந்துள்ளார். தமிழ்நாடு அணிக்காகவும், சென்னை அணிக்கும் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று கோப்பைகளையும் பரிசுகளையும் வென்று குவித்துள்ளார்.

    அரசு உதவ வேண்டும் :-

    கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இந்திய மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணிக்கு தொடர்ந்து போட்டிகள் இல்லாததால் கால்பந்து அணி முடங்கியுள்ளது. இதனால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்கின்றார் இந்திய மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணியை சேர்ந்த பாலா. தொடர்ந்து போட்டிகள் இல்லாததால், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையின் விளிம்பிற்கு சென்று விட்டதாக கூறுகிறார்  பாலா. தன்னை போல பயிற்சி பெற்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வீரர்களும் பெரும் சோகத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்.

    உள்ளூர் போட்டிகளுக்கு கூட செல்ல முடியாமல் தங்களின் பயணச்செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதால் மிகவும் கடுமையான சூழல் உள்ளதாக கூறினார்.

    தங்களின் செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்வதாலும், தங்களின் குடும்பங்களை கவனிக்க சிரமமாக உள்ளதாலும், அரசு தங்களுக்கு அரசு வேலை ஒன்றை வழங்கினால், மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் பாலா.

    கை இல்லாத நிலையிலும் மனம் தளராமல் கடின முயற்சியால் இந்திய மாற்றுத்திறனாளி கால்பந்து அணியின் கேப்டன் என உயர்ந்த போதிலும் அதற்கான அங்கீகாரமும் ஆதரமும் இன்றி தவிக்கும் பாலாவுக்கு தமிழக அரசு ‘கை’ கொடுத்து உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Football, Sports, Sports Player, Theni

    அடுத்த செய்தி