தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் அகிலன் என்ற 26 வயதாகும் தங்கம். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பத்து மாதங்கள் தான் ஆகியுள்ள நிலையில் அவரின் மனைவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பூண்டு வியாபாரம் செய்யும் தங்கம், வழக்கம் போல சின்னமனூர் பகுதியில் பூண்டு வியாபாரம் செய்துவிட்டு சொந்த ஊரான போடிநாயக்கனூருக்கு இருசக்கர வாகனத்தில் மாநில நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் புறவழிச்சாலை சிவகாமியம்மன் கோவில் அருகே உள்ள வேகத்தடையில் வாகன வேகத்தை குறைத்து மெதுவாக சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
டிப்பர் லாரி வேகமாக மோதியதில் சாலையில் தூக்கிவீசப்பட்டு விழுந்த வாலிபர் மீது லாரி சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தங்கம் . உடனடியாக அப்பகுதியில் உள்ள நபர்கள் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை ஓட்டி வந்த பாலர்பட்டியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமாகி பத்து மாதங்களே ஆன சூழ்நிலையில் கணவனை இழந்த 5 மாத கர்ப்பிணியான மனைவி ரம்யா கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பைபாஸ் பிரிவு மற்றும் முக்கிய சந்திப்புகளில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் எனவும் , தேவையான இடத்தில் காவல்துறையினர் டிவைடர் மற்றும் அறிவிப்பு பலகை போன்றவற்றை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.