ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையை ஒட்டி, பூஜைகளுக்கு தேவையான பொருட்களின் விலை தேனி பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது.
இரு தினம் பண்டிகை :-
இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும், இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. துர்கா தேவியை வழிப்படும் இந்த பண்டிகையின் இறுதி நாட்களில் விஜய தசமி மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பண்டிகை சரஸ்வதி பூஜை, விஜயதசமியுடன் நிறைவடைகிறது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களையும் போற்றும் விதமாக மக்கள் நவராத்திரி பண்டிகையை கொண்டாடினாலும் இறுதி நாட்களான விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை மிகவும் விஷேச நாளாக பார்க்கப்படுகிறது.
தற்போது பெரும்பாலான கோயில் மற்றும் வீடுகளில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையின் கடைசி நாட்களில் வரக்கூடிய ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை இன்று முதல் இரு தினங்களுக்கு கொண்டாடப்பட உள்ளது . இந்த பண்டிகையின் போது மக்கள் தங்களின் வீடு, கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.
இதனையடுத்து, வீடு, கோவில், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களை சுத்தம் செய்து, சரஸ்வதி தேவியை வணங்கி வழிபடுவர்.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் புதிய சேர்க்கையும் நடைபெறுவதும் , பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் புத்தகங்களை சரஸ்வதி தேவியின் முன்பு வைத்து வழிபாடு செய்வதும் , தொழில் செய்யும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களின் வேலைப் பொருட்களை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையன்று வைத்து வழிபாடு செய்வதும் வழக்கமாகும்.
பூஜை பொருள்கள் :-
பொதுமக்கள் இந்த பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்து இல்லங்களிலும் ஏற்கனவே தொடங்கி அதற்கான வழிபாடுகளும் நடந்து வருகிறது.
பொதுவாக நவராத்திரி பண்டிகையின் போது பூஜை பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால் பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கும். நவராத்திரி பண்டிகை நாட்களில் கொண்டாடப் படும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட உள்ளதால், இந்த பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள் பூ மற்றும் வாழை இலை, பொறி போன்றவைகளின் விற்பனை சற்று அதிகமாகவே இருக்கும்.
போக்குவரத்து நெரிசல் :-
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் பூஜை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பூஜைக்கு தேவைப்படும் கற்பூரம், சந்தனம் குங்குமம் திருநீர் போன்றவைகளை விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நெய்விளக்கு, அகல்சட்டி, கார்த்திகை சட்டி போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
பொரி ஒரு பாக்கெட் 25 முதல் 30 ரூபாய் வரையும், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக 200 ரூபாய் வரையும், தென்னை இலை தோரணங்கள் ஐந்து 50 ரூபாய்க்கும், பேப்பர் தோரணங்கள் நிறத்திற்கு ஏற்றாற் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வாழைக்கன்றுகள் பழங்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. பண்டிகை நாட்களை ஒட்டி, இவற்றின் தேவை அதிகமாக உள்ளதால் விலை அதிகமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.
பூ மார்க்கெட் பகுதிகளில் அலைமோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayudha poojai, Cumbum, Theni