Home /theni /

சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்த முயற்சி.. டொம்புச்சேரியில் குழந்தை திருமணம் - 4 பேர் மீது வழக்கு.. (தேனி மாவட்ட கிரைம் செய்திகள்)

சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்த முயற்சி.. டொம்புச்சேரியில் குழந்தை திருமணம் - 4 பேர் மீது வழக்கு.. (தேனி மாவட்ட கிரைம் செய்திகள்)

Crime

Crime

Theni Crime News: தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய க்ரைம் நிகழ்வுகள் குறித்த செய்தி தொகுப்பு...

  சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்த முயற்சி.. மருத்துவர் வீட்டில் திருட்டு ( தேனி மாவட்ட கிரைம் ரவுண்டப் செய்திகள் )

  தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய க்ரைம் நிகழ்வுகள் குறித்த செய்தி தொகுப்பு...

  மருத்துவர் வீட்டில் திருட்டு :-

  தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள கே.ஆர்.ஆர் நகர் 3வது தெருவில்  பல் டாக்டரான பாப்புசாமி என்பவரின் வீட்டில் 16 பவுன் நகைகள், வெளிநாட்டுப்பணம் உட்பட ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தேனி நகர் KRR நகரில் உள்ள மறைந்த பல் டாக்டரான பாப்புசாமி என்பவரின் வீட்டில், பாப்புசாமியின் 70 வயதுடைய மனைவியான ஜெயராணி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். பாப்புசாமி ஜெயராணி தம்பதியின் மகள் அசுவந்தம்மாள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாப்புசாமி ஜெயராணி தம்பதியின் மகளான அசுவந்தம்மாள் கோடை விடுமுறைக்கு தனியாக இருக்கும் தாயை காண தேனி வந்துள்ளார். மறுநாள் மகளுடன் ஜெயராணி காரில் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு சென்றார். இதை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 16.5 பவுன் நகைகள், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ரூ.2 ஆயிரம், அமெரிக்கா டாலர் 50, மலேசியன் ரிங்கட் 200 உள்ளிட்ட ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

  திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராணி மற்றும் அசுவந்தம்மாள் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மாயராஜலட்சுமி வீட்டை முழுவதுமாக ஆய்வு செய்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயற்சி - போக்சோ பாய்ந்தது

  தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் வள்ளி நகரைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் 22 வயதாகும் மும்மூர்த்தி. கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த சிறுவனை அங்கு கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

  நீண்ட நேரமாகியும் சிறுவனை காணததால் அவரது பெற்றோர்கள் சிறுவனை தேடியுள்ளனர். தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் உறவினரின் உதவியுடன் தேடிச் சென்றபோது சிறுவன் மும்மூர்த்தி வீட்டில் இருந்ததும் அங்கு சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக்கண்டும் சிறுவனின் பெற்றோர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  இதில் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மும்மூர்த்தியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த மும்மூர்த்தி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி அனுமதிக்கப்பட்ட பின் அல்லிநகரம் காவல்துறையிடம் சிறுவனின் தாயார் புகார் அளித்ததின் பேரில் மும்மூர்த்தி மீது போக்சோ சட்டம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

  போக்சோ இருவர் கைது :-

  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகனான 22 வயதாகும் மனோஜ், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 12 வயதாகும் மகளை காணாததால் அவரது பெற்றோர்கள் நகர் முழுவதும் தேடிய பின்பு போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  பெற்றோரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்ததில், மனோஜ் என்பவர் ஆசை வார்த்தை கூறி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மனோஜை கண்டறிந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மனோஜ் மற்றும் அவருக்கு உதவிய இருபத்தி ஒரு வயதாகும் ரம்ஜான் உசேன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  குழந்தை திருமணம் - 4 பேர் மீது வழக்கு :-

  தேனி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையன். இவருக்கு 24 வயதாகும் கனி ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு 16 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்து, அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் கர்ப்பிணியான சிறுமியை,  சிறுமியின் பெற்றோர்கள் வளைகாப்பு நடத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

  சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு தேனி அரசு மருத்துவமனையில் பிரசவம் ஆன நிலையில், சிறுமியின் வயது குறித்து தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் சிறுமிக்கு குறைந்த வயதிலேயே திருமணம் செய்யப்பட்டதை அறிந்து கனிராஜா அவருடைய தாய் வசந்தி சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேர் மீதும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் போக்சோ சட்டம் ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  இருசக்கர வாகன விபத்து :-


  தேனி மாவட்டம் கம்பம் வடக்கு பட்டியைச் சேர்ந்த 62 வயதாகும் ராஜாங்கம் விவசாய கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவர் நேற்று இரவு கம்பம் நகரில் இருந்து புதுபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது கம்பம் உத்தமபாளையம் தேசிய நெடுஞ் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ராஜாங்கம் பயணம் செய்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. கார் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் பலத்த காயமடைந்ததையடுத்து, அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜாவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலை மணி வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான 34 வயதாகும் போடியை சேர்ந்த சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தற்கொலை முயற்சி :-

  தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மறுகால் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 18 வயதுடைய பிரகாஷ்ராஜ் என்ற மகன் உள்ளார். தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர் கல்லூரிக்கு தொடர்ந்து ஒழுங்காக செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

  கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்த மகனை பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்த பிரகாஷ்ராஜ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்த்தனர் பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பிரகாஷ்ராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார் இதுகுறித்து ஜெய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மர்மமான முறையில் மரணம் :-

  தேனி மாவட்டம் கூடலூரில் தனியார் திரையரங்கம் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று வழக்கம்போல பொதுமக்கள் பொருட்களை வாங்க வந்துள்ளனர். அப்போது நியாய விலை கடை அருகே பெண் ஒருவர் அரை நிர்வாணமாக இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  இதனை அடுத்து பொதுமக்கள் கூடலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர் ஆக அதே பகுதியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித் திரிந்தவர் என்றும், 50 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மயில் என்பதும் தெரியவந்துள்ளது.

  மேலும் இறந்து கிடந்த பெண்ணின் தலை உடல் போன்றவற்றில் காயங்கள் இருந்ததால் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இதனையடுத்து தொடர் விசாரணையில் மர்ம நபர்கள் அப்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  50 வயது மதிக்கத்தக்க பெண் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சாலை விபத்து :-

  தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இவரது இளைய மகன் சந்துரு. உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி யில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 16 வயதாகும் சந்துரு 11 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

  தற்போது பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் சந்துரு இன்று வழக்கம் போல் தேவாரம் பகுதியில் இருந்து ராயப்பன்பட்டி சென்றுள்ளான்.

  இதற்கிடையே உத்தமபாளையம் புறவழிச்சாலை கோகிலாபுரம் விலக்கு அருகே நடந்து சென்று மற்றொரு வாகனத்தில் ஏறிச் செல்ல முற்பட்டபோது, சின்னமனூரில் இருந்து கம்பம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சந்துரு மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

  உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த 108 பணியாளர்கள் காயமடைந்த சந்துருவை முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு உயிரிழந்தான்.

  இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உத்தமபாளையம் காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஒட்டி வந்த ஓட்டுனரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுதச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக சாலை விபத்தில் பலியான சம்பவம் பாதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  செய்தியாளர் : சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி