முகப்பு /தேனி /

அரிசி கொம்பன் யானை இடம்பெயர்வு.. மேகமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது?

அரிசி கொம்பன் யானை இடம்பெயர்வு.. மேகமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது?

X
மேகமலை

மேகமலை

Arisi Komban Elephant | அரிசி கொம்பன் யானை கேரள பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக கூறப்படும் நிலையில் மேகமலைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

  • Last Updated :
  • Theni, India

கேரளா மூணாறு பகுதியில் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை தேனி சின்னமனூர் அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் உலாவி வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து இருந்தனர். தற்போது அரிசி கொம்பன் யானை கேரளப் பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக கூறப்படும் நிலையில் மேகமலைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்திய அரிசி கொம்பன்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜக்காடு அருகே உள்ள சின்னக்கல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் என்ற யானை பல நபர்களை பலி வாங்கியுள்ளது.

இதனால் கடந்த ஏப்ரல் 30ம் தேதி மயக்க ஊசி செலுத்தி 3 கும்கி யானைகள் உதவியுடன் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அரிசி கொம்பன் யானை உயிருடன் பிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க : தென் திருப்பதிக்கு செல்ல ஆபத்தான சாலையில் "ரிஸ்க்" எடுக்கும் பக்தர்கள்!

இதையடுத்து அன்றைய தினம் இரவே பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானையை தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கண்ணகி கோட்ட வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் விட்டனர். மேலும் வனத்துறையினரின் கண்காணிப்புக்காக யானையை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.

வனத்துறை தொடர் கண்காணிப்பு

கேரள வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்திருப்பது வனத்துறையினர் கண்காணிப்பில் தெரியவந்தது. தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாறு, மணலாறு, ஹைவேவிஸ் உள்ளிட்ட இடங்களுக்கு அரசிக்கொம்பன் யானை உலவி வந்ததோடு, பயணிகள் செல்லக்கூடிய அரசு பேருந்தை வழி மறைத்து பயணிகளை அச்சுறுத்தியது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் சென்று யானை அட்டகாசம் செய்து வந்தது.

அரிசி கொம்பன் யானை

இடம்பெயர்ந்த அரிசி கொம்பன்

இதனால் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு வனத்துறையினர் தடை வைத்துள்ளனர். இதனிடையே 24 மணி நேரமும் வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்த அரிசிக் கொம்பன் யானை தற்போது இடம்பெயர்ந்து கேரள பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. யானை நடமாட்டம் இல்லாததால் மேகமலைக்கு செல்லும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

எப்போது அனுமதி?

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “அரிசி கொம்பன் யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் வனக் குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யானை தற்போது இடம் பெயர்ந்திருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மேகமலை பகுதிக்கு வரும் என்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டம் முற்றிலும் குறைந்த பின்பு சுற்றுலாவை பணிகளை அனுமதிக்க வாய்ப்பு உள்ளது” என கூறினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni