தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதிக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் காட்டு யானை, குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் மூணாறு சின்னக்காணல் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக் கொம்பன் காட்டு யானை கடந்த 29ம் தேதி கேரளா வனத்துறையால் பிடிக்கப்பட்டு தேக்கடி புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அங்கிருந்து இடம்பெயர்ந்து கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் சுற்றி வந்த அந்த யானை நேற்று லோயர் கேம்ப் மலையடிவார பகுதிகளுக்குள் நுழைந்தது. தொடர்ந்து இன்று காலை கம்பம் நகர் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கம்பம் நடராஜன் திருமண மண்டபம், நந்தகோபாலன் கோயில் தெரு, நாட்டுக்கல் தெரு, கூலத்தேவர் தெரு, உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் அரிசிக்கொம்பன் யானை நடமாடியது. அப்போது உழவர் சந்தை சாலையில் நின்ற கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை அரிசிக்கொம்பன் யானை தாக்கியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த நபர் காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆன்ந்த் தலைமையிலான வனத்துறையினர் கம்பம் நகர் பகுதியில் சுற்றித்திரியும் அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் கம்பம் நகரில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கம்பம் நகராட்சியினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
இதனிடையே அரிசிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பன் யானையை பிடிப்பது குறித்து வனத்துறையினர் தான் முடிவு செய்ய முடியும் எனக்கூறினார்.
இந்த நிலையில் யானை ஆக்ரோஷமாக துரத்தி கொண்டிருந்த போது மூதாட்டி ஒருவர் நைசாக யானையிடம் இருந்து தப்பி சென்ற காட்சிகளும் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Local News, Theni