தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு (23/12/22) ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஆண்டிப்பட்டியை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(40), என்பவர் இயக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணி அளவில் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, மலைப்பாதையில் இருந்து சுமார் 40 அடி பள்ளத்தில் தலைகீழாக பாய்ந்து, பெரியாறு அணையில் இருந்து லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய ராட்சத குழாய்கள் மீது கார் விழுந்து நொறுங்கியது.
மீட்பு பணி :
இதனைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக இறங்கிச் சென்று பார்த்தபோது விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து ஐயப்ப பக்தர்களின் அலறல் சத்தம் பலமாக கேட்டுள்ளது.
உடனடியாக குமுளி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ்க்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் - ஒருவழிப் பாதை விவரங்கள்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் காரில் வந்த ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த முனியாண்டி(55), தேவதாஸ், கன்னிச்சாமி, நாகராஜ்(46), வினோத்(47), சிவக்குமார்(45), கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அனைவரது சடலங்கள் உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த கார் டிரைவர் கோபாலகிருஷ்ணன், ராஜா, ஆகிய இருவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதல்சிகிச்சையளித்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்தவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா என்பவரது மகனான 7 வயதாகும் ஹரிஹன் குமுளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கார் டிரைவர் கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டானது.
படுகாயமடைந்த ராஜா மற்றும் சிறுவன் ஹரிஹரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்தக்குள்ளாகி எட்டுபேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து குமுளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : சுதர்சன் - தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni