மண் வளம் காப்பதே உழவர்களின் உற்ற நண்பனான மண்புழுக்களின் தலையாய கடமை.மண்ணின் வளத்தை நிர்ணயிக்கக் கூடிய உயிரியல் காரணியான மண்புழுக்கள் வளமான மண்ணை உயிரோட்டம் உள்ளதாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.மண்வளத்தை பெருக்க மண்புழு உரம் தயாரிப்பது, பயன்படுத்துவது விவசாயிகளின் கடமை.எனவே மண் வளத்தை காப்பது எப்படி என்று தஞ்சாவூர் வேளாண் துறை இயக்குநர் நல்லமுத்து ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதை பின்வருமாறு விவரமாக காணலாம்.
நிலத்தை இயற்கையாகவே உழுது, மண்ணை மேம்படுத்தி, நல்ல காற்றோட்டத்தை உருவாக்கி, பல்வேறு வகையான நுண்ணுயிரிகளின் புகலிடமாக மாற்றுவதோடு வளிமண்டல தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி, உவர் நிலத்தை மேம்படுத்தி நிலையான வேளாண்மைக்கான பெரும் பங்கு வகிக்கும் மண்புழுக்களின் பண்புகளையும், வளர்க்கும் முறைகளையும் மண்புழு உரத்தின் பயன்பாடுகளையும் மற்றும் மண்புழு உரம் சார்ந்த அனைத்து தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
மண்புழுக்கள் பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப்பகுதியை மட்டுமே உண்ணக்கூடியது. இவைகள் வெளியிடுகின்ற மண்புழு உரம் ஆனது பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திட்டமிட்ட பரிபூரண பயிர் உணவு எனவும் கருதப்படுகிறது.நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள வளமான மண்ணையும் நிலத்தின் மேற் பகுதிக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருக்கிறது.
மைக்கேல்சன் என்ற மண்புழுவல்லுனர் 1933 ஆம் ஆண்டு மண்புழுக்களை ஒலிகோகிட்டா என்ற குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தினார். உலகில் சுமார் 240 மண்புழுக்களின் பேரினங்களும், 3320 மண்புழுக்களின் சிற்றினங்களும் காணப்படுகிறது.மண்புழுக்கள் ஒரு இருபால் உயிரி ஆகும். ஒரே மண்புழுவில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்படுகிறது. 14 வது கண்டத்தில் வயிற்றுப் பகுதியில் ஒரு ஜோடி பெண் இனப்பெருக்க உறுப்புகளும், 18 ஆவது கண்டத்தில் வயிற்றுப் பகுதியில் ஒரு ஜோடி ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் காணப்படுகிறது.
ஒரே மண்புழுவில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இருந்தாலும் இரண்டு மண் புழுக்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்கிறது. மண்புழு மிகச் சிறிய உடல் அமைப்பை பெற்றிருந்தாலும் நன்கு வளர்ச்சி அடைந்து முறையான உணவு மண்டலத்தை பெற்றுள்ளது. உணவு மண்டலமானது வாய், வாய்குழி உணவு குடல் மற்றும் அரவைப்பை என்று பிரிக்கப்படுகிறது. இவற்றிற்கு நீண்ட குழல் வடிவில் ஆசனவாய் உள்ளது. உணவுக் குழலானது உணவை வரவேற்கும் பகுதி செரிக்கும் பகுதி என சிறு சிறு பிரிவுகளாக காணப்படுகிறது. மண்புழு உணவாக உட்கொள்கின்ற மண் மற்றும் இலை வரவேற்கும் பகுதியில் வழியாக சென்று அரவைப்பையில் நன்கு அரைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அரைக்கப்பட்ட உணவு செரிக்கும் பகுதிக்கு சென்றடைகிறது. செரிக்கும் பகுதியில் அமைலேஸ், கைடினேஸ், இன்வர்டேஸ், லிபேஸ், புரோட்டியஸ், பாஸ்பட்டேஸ் போன்ற நொதிகள் சுரந்து உணவு சிதைவடைய செய்கிறது. இது பின்னர் உறிஞ்சும் பகுதிக்கு செல்கிறது சிதைக்கப்பட்ட பொருட்களில் 5 முதல் 10 சதம் தன் உடல் வளர்ச்சிக்கு எடுத்துக் கொண்டு மீதியை எச்சமாக வெளியிடுகிறது. இதுவே மண்புழு உரம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு இடத்தில் காணப்படும் மண் புழுக்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கக் கூடிய காரணிகளில் முக்கியமானது ஈரப்பதம், கார அமில நிலை மற்றும் அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய கனிம பொருளின் தன்மை மற்றும் அவற்றின் அளவு ஆகும். மண்ணின் மேற்பரப்பில் வாழக்கூடிய மண்புழு ஊதா, சிவப்பு, கருஞ்சிவப்பு மற்றும் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை முட்டை பருவத்தில் இருந்து வளர்ச்சி அடைய 70 நாட்களாகும்.
இவை நாளொன்றுக்கு ஏழு மில்லி கிராம் வளர்கிறது. அதிகபட்சமாக 1.5 கிராம் எடை கொண்டது. இவை சுமார் 50 நாட்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிறது. இவை இனச்சேர்க்கைக்கு பின்பு 5 முதல் 6 நாட்களுக்குள் முட்டை கூடுகளை இடுகிறது மூன்று நாட்களுக்கு ஒரு முறையே முட்டை கூடுகளை இடுகிறது. அடைகாக்கும் காலம் 23 முதல் 25 நாட்களாகும்.
ஒரு வருடத்தில் சுமார் 900 முட்டை கூடுகளை இடுக்கிறது. ஒவ்வொரு முட்டைக்கூட்டில் இருந்து இரண்டு முதல் மூன்று இளம் புழுக்கள் உருவாகிறது. இவை சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. மண் புழுக்களை குழி முறையிலும், தொட்டி முறையில் வளர்த்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.உரக்குழியின் அளவுகள் முறையே 2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ளதாக இருக்க வேண்டும். கழிவு பொருட்களின் அளவைப் பொறுத்து உரக் குழியின் ஆழத்தை நிழல் பாங்கான மேட்டுப் பகுதியில் அமைக்க வேண்டும்.மண்புழு உரத்தினை ஏக்கருக்கு ஒரு டன் அளவில் இடலாம். பூந்தொட்டிகளுக்கு 50 கிராம் வீதம் இருமுறையும், மரங்களுக்கு 100 கிராம் வீதம் நாலு முறையும் இடலாம். மண்புழு உரம் இட்டால்மண்வளம் காக்கப்படும்”என்று தெளிவாக அறிவுரை சொன்னார் வேளாண் அதிகாரி .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Thanjavur