தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கைலி அணிந்து வரத் தடை விதித்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கே கரிகாலன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இங்கு அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு வரும் நபர்கள் கைலி, கால் சட்டை ஆகியவை அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்துள்ளார். மேலும் கைலி அணிந்து வருபவர்களை அலுவலகத்தில் உள்ளே விட மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க வந்த தந்தை ஒருவர் கைலி அணிந்து கொண்டு வந்ததால் உள்ளே அனுமதிக்கப்படாமல் அவர் சான்றிதழுக்காக வெளியே காத்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
https://youtu.be/vKHVyZcMm4Y
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், செங்கிப்பட்டியை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் முழுவதும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள். எனவே அனைவரும் கைலி போன்றவை அணிந்துதான் வேலைக்கு செல்வார்கள். அப்படி இருக்கும்போது இங்கு கைலி அணிந்து வரக்கூடாது என்பது கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை, மேலும் அலுவலகத்திற்குள் கைலி அணிந்து வரக்கூடாது என்று சட்டமும் கூறவில்லை என அவர்கள் கூறுகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கைலியுடன் வர தடை விதித்த விஏஓவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thanjavur