ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் மண் பானை, மண் குதிரைகள் தயாரிப்பு- பாரம்பரியமாக செய்யப்படும் முறைகள் தெரியுமா?

தஞ்சையில் மண் பானை, மண் குதிரைகள் தயாரிப்பு- பாரம்பரியமாக செய்யப்படும் முறைகள் தெரியுமா?

மண்

மண் பானை தயாரிப்பு

தஞ்சாவூர் மாவட்டம்ஒரத்தநாட்டிலுள்ள கிராமத்தில் பாரம்பரியமாக மண்பானை, மண் குதிரைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Orathanadu (Mukthambalpuram), India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தெக்கூர் பஞ்சாயத்தை சேர்ந்தது குலாலர் தெரு கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக பானை மற்றும் குதிரை, யானை போன்ற பல்வேறு வகையான மண் கலை பொருட்களை இந்த கிராமத்தினர் செய்துவருகின்றனர்.

இந்த குலாலர் எனும் கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசிக்கின்றனர். அதில் நிறைய குடும்பங்கள் இந்த பானை தொழிலையே ஆண்டாண்டு காலங்களாக செய்துவருகின்றனர்.

அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 71 வயதான பானை செய்யும் தொழிலாளி முத்துவிடம் பேசும்போது, 'என் பெயர் முத்து வேளார். நாங்கள் வேளாளர் வகையினை சேர்ந்தவர்கள். வேளாளர்கள் உருவான காலத்திலிருந்தே நாங்கள் இந்த பானை தொழிலை செய்து கொண்டு இருக்கின்றோம்.

மண் குதிரைகள்

நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட பிறகு கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்த மண் தொழிலை செய்து கொண்டிருக்கின்றேன். இந்த தொழிலை செய்வதற்கு சிரமமாக இருந்தாலும் பரம்பரைத் தொழிலாக இருப்பதால் அதை விட்டுக்கொடுக்காமல் இத்தனை ஆண்டு காலங்களாக நான் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

எந்தெந்த வகையான மண் பொருட்கள் செய்கிறீர்கள்?

மண்பாண்ட வகைகள் அதாவது பானை, மண்குடம், மண் சொம்பு, அகல்விளக்கு இதுபோன்ற வீட்டில் பயன்படுத்தும் அனைத்து வகையான மண்பாண்ட வகைகளையும் செய்து வருகின்றேன். மேலும், சாமி சிலைகளையும் செய்துவருகிறேன். இதுபோன்ற எண்ணற்ற வகையான மண் பொருட்களையும் முன்பதிவின் அடிப்படையில் செய்து வருகின்றேன்.

மண்பானைகள்

அதுமட்டுமல்லாமல் கோயில்களுக்கு அமைக்கப்படும் குதிரை, யானை, ஆடு, மாடு மற்றும் சாமி சிலைகள் இதுபோன்ற எண்ணற்ற வகையான மண் பொருட்களையும் முன்பதிவின் அடிப்படையில் செய்து வருகின்றேன்.

பானைகள் செய்யும் முறை?

பானை செய்வதற்கு வண்டல் மற்றும் களிமண்ணை பயன்படுத்துகிறோம். மண்களை மாட்டு வண்டியிலோ அல்லது எந்திர வாகனங்கலோ எடுத்து வந்து நன்கு காயவைத்து அதிலுள்ள குச்சிகள் மற்றும் கற்களை(அசடுகளை) எடுத்து அப்புறப்படுத்திய பிறகு அதனை தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து மூன்று மணி நேரமாக கால்களை வைத்து நன்கு மிதித்த பிறகு, மண்ணை காயவைத்து மறுநாள் பானை மற்றும் பல வகையான கலைப்பொருட்களையும், செய்வதற்கு பயன்படுத்துகின்றோம்.

அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மண்பானைகள்

முந்தைய காலத்தில் பானைகள் செய்வதற்கு சக்கரங்களை சுழல விட்டு அதில் மண்களை நிரப்பி பானைகளை செய்துகொண்டிருந்தோம்.

இக்காலகட்டத்தில் எந்திரங்கள் வந்துவிட்ட நிலையில், எந்திரங்களை பயன்படுத்தியே பானைகள் செய்து கொண்டு வருகிறோம். 20 பானை செய்வதற்கு தேவையான மண்ணை எடுத்து எந்திரங்களில் வைத்து சுழலும் நேரத்தில் அந்தப் பானைகளை செய்து முடிப்போம்.

மண் குதிரை

அவ்வாறு செய்யும் போது ஒரு பானை செய்வதற்கு மூன்று நிமிடம் ஆகும். செய்யப்பட்ட பானைகளை சூலத்தில் வைத்து விறகுகளை மேலே போட்டு அதைக் கொளுத்தி விட்டு இரவு முழுவதும் வைத்து சூடுபடுத்துவதாகவும், மறுநாள் காலையில் அந்த பானைகளை சரிபார்த்து எடுப்பதாகவும் கூறினார்.

மண் குதிரை

உதாரணமாக 100 பானைகள் சூலத்தில் வைத்து எரிக்கப்பட்டால் அதில் 15 பானைகள் வீணாகிவிடும். இதுபோன்ற முறைகளிலே பானைகளை செய்துகெண்டு வருகிறோம் என்று முத்து தெரிவித்தார்.

செய்யப்படும் பானைகளை விற்கும் முறை?

வியாபாரிகள் எங்களுடன் தொடர்பில் இருப்பதால் வியாபாரிகளிடம் இந்த பானைகளை மொத்தமாக விற்று விடுவோம். பொங்கல் விழா நேரங்களில் நாங்களே சென்று பானைகள் மற்றும் குவளை போன்ற மண்பாண்டங்களை மக்களிடம் நேரடியாக விற்போம்.

பொங்கல் விழா நேரங்களிலேயே பானைகள் அதிகளவில் விற்கப்படும். ஒவ்வொரு முறையும் சூலத்தில் பானைகளை எரிக்கும்போது வியாபாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்போம். பிறகு வியாபாரிகள் வந்து இந்த பானைகளை எடுத்துச் செல்வார்கள்.

இந்த பானைகளை எடுத்துச் செல்வதற்கு மதுக்கூர், பட்டுக்கோட்டை, அரியலூர், திருச்சி அதைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். எங்களால் செய்யப்பட்ட பானைகள் வியாபாரிகள் மூலம் லண்டனுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது.

யானை, குதிரை போன்ற விலங்குகளை செய்து விற்பனை செய்யும் முறை?

விலங்கு வகைகள் கிட்டதட்ட இது போன்ற முறைகளில் தான் செய்யப்படுகிறது. மூன்று குதிரையோ அல்லது மற்ற விலங்குகளை செய்வதற்கு ஒரு வார காலம் ஆகும். இந்த வகையான கலை பொருட்கள் முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செய்கிறோம்.

உதாரணமாக கோயிலுக்கு தேவைப்படும் சாமி சிலைகள் மற்றும் யானை, குதிரை, மற்றும் மாடு, ஆடு இது போன்ற எண்ணற்ற வகை விலங்குகளை முன்பதிவின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி செய்து கொடுத்து வருகின்றோம். மேலும் அகல் விளக்குகளையும் செய்கிறோம். ஆனால் பானைகள் மட்டுமே முன்பதிவின்றி வருடம் முழுவதும் செய்கிறோம்' என்று தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur