ஹோம் /தஞ்சாவூர் /

வைகுண்ட ஏகாதசி விழா: தஞ்சாவூர் நாலு கால் மண்டபம் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழா: தஞ்சாவூர் நாலு கால் மண்டபம் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

X
வைகுண்ட

வைகுண்ட ஏகாதசி

Thanjavur News : தஞ்சாவூரில் நாலுகால் மண்டபம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சையிலும் பல பெருமாள் கோயில்களில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை நடந்தது. அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்து சென்றார். தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. மேலும் பள்ளி அக்ரஹாரம் வீரநரசிம்மர், மணி குன்றா பெருமாள் மற்றும் நீல மேகப் பெருமாள் கோயில் உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பள்ளி அக்ரஹாரம் வீர நரசிம்மர், மணிக்குன்ற பெருமாள், நீலமேகப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசத்தில் 8வது திவ்ய தேசமாகவும், பஞ்சரங்கனின் ஒருவராகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சியாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் 10ம் நாள் மோகினி அலங்காரம், 2ம் தேதி அதிகாலை 4: 55 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு ஆகியவை நடந்தது.  ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், போலீசார், கிராம மக்கள் மேற்கொண்டு இருந்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.

First published:

Tags: Local News, Tamil News, Thanjavur, Vaikunda ekadasi