Home /thanjavur /

இலங்கை இனப்படுகொலை நினைவுகளைச் சுமந்து நிற்கும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

இலங்கை இனப்படுகொலை நினைவுகளைச் சுமந்து நிற்கும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

இலங்கை இறுதிப் போரின் கொடூரங்களை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுமந்து கொண்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
இலங்கை‌ இறுதி கட்டப் போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் சம்பவத்தை கண்முன்னே காட்டுகிறது தஞ்சையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். ஈழத் தமிழர்களின் படுகொலையை கலை வடிவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தாங்கிநிற்கிறது.

இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து மனிதர்களின் தேவைக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை கேள்விப்பட்டும் பார்த்தும் இருப்போம். நம் மீதே போர் தொடுத்ததைப் போல், மார்பில் குண்டு பாய்ந்ததைப் போல் உணர வைத்த இலங்கை தமிழர்கள் மீதான இறுதி கட்ட போர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத சம்பவமாகும்.

முள்ளிவாய்க்கால் படுகொலை: 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழீழ விடுதலைக்கான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழ் மக்கள், தங்கள் ரத்தத்தை ஆறாக ஓட விட்ட மண்தான் முள்ளிவாய்க்கால்.

தனித் தமிழ் ஈழம் என்ற முழக்கத்தோடு உலக நாடுகளின் உதவியோடு இருந்த இலங்கையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது ஒரு பெரும் படை. அதுதான் பிராபகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தங்களுக்கு விடுதலையை வாங்கி தர உதித்த ஒரு உன்னத தலைவனாக பிரபாகரனை கருதினர் இலங்கை வாழ் தமிழர்கள். அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி.

இங்கு இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஈழ தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், ஈவு இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம். இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கோர சம்பவத்தை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 2013- ஆண்டு பழ.நெடுமாறன் தலைமையில் பொதுமக்கள் பார்ப்பதற்காக திறக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்தில் போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட சுவரில் தனித்தனி கற்களால் காட்சிப்படுத்தியுள்ளனர்.

அனைத்து மக்களுக்கும் இலங்கை இறுதிக் கட்ட போரில் நடைபெற்ற கொடூரங்களைப் பற்றி தெரியப்படுத்தும் நோக்கத்திற்காக இந்த நினைவு முற்றம் நிறுவப்பட்டது.
மேலும் இந்த நினைவு முற்றத்தில் மாவீரர் மண்டபம், முத்தமிழ் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தலைவர்கள் முதல் தமிழீழ விடுதலைப் போரின் போது தன் உயிரை ஈகையாக தந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படங்கள் போன்ற 300 க்கும் மேற்பட்டோர் படங்கள் வைக்கப்பட்டது.

மேலும் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. தஞ்சை பகுதி எளிய மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் தமிழ் இசை பயிற்சி, ஓவியப் பயிற்சி, நாட்டியப் பயிற்சி, யோக பயிற்சிகள் கட்டம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது, தற்போது கொரோனா கட்டுப்பாட்டிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயிற்சியகங்கள் விரைவில் மீண்டும் செயல்படுத்த இருக்கிறார்கள்.

மேலும் இங்கு வந்து பார்வையிடுவதற்கும், இப்பயிற்சி கலை மேற்கொள்வதற்கும் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் மக்கள் தினமும் வந்து தினமும் வந்து கண்ணீர் மல்க பார்த்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்து மக்களும் வந்து பார்க்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. தமிழர்கள் தரும் நிதிகளை கொண்டு இந்நினைவு முற்றம் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி