Home /thanjavur /

வாட்ஸ்அப் மூலம் உதவி கோரிய ஏழை மாணவன்- வீடு கட்ட துணை நின்ற தஞ்சாவூர் ஆட்சியர்

வாட்ஸ்அப் மூலம் உதவி கோரிய ஏழை மாணவன்- வீடு கட்ட துணை நின்ற தஞ்சாவூர் ஆட்சியர்

வீட்டைத் திறந்துவைக்கும் ஆட்சியர்

வீட்டைத் திறந்துவைக்கும் ஆட்சியர்

மாணவனின் வாட்ஸ் அப் மனுவுக்கு மரியாதை கொடுத்து பசுமை வீடு கட்டும் திட்டம் மற்றும் மதர் தெரசா பவுண்டேஷன், தனியார் பள்ளி நிர்வாகம், லைன்ஸ் கிளப் ஆகியவற்றின் கூடுதல் நிதி உதவியோடு புதியதாக வீடு கட்டிக் கொடுத்த தஞ்சை மாவட்ட அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ப?

மேலும் படிக்கவும் ...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வடக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(47). அவரது கணவர் இறந்து விட்டார். அவரது தாயுடன் வசித்து வருகிறார். தமிழ்செல்விக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். மேற்படிப்புக்காக தஞ்சையில் உள்ள அரசு கல்லூரியில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இவர்கள் வசித்த மண் சுவர் கொண்ட கூரை வீடு கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலில் முழுவதும் சேதம் அடைந்துவிட்டது. பின்பு அடிக்கடி பெய்யும் மழையால் கூரையினுள் தண்ணீர் புகுந்து மாணவனின் பாட புத்தகங்கள் அடிக்கடி நனையும் நிலை உருவாகியது.

இருப்பினும் படிப்பில் மிகுந்த ஆர்வம் உடைய மாணவன் வேல்முருகன் வெளி மாவட்டங்களில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளார். தாய் தமிழ்ச் செல்வி நூறுநாள் வேலை மற்றும் சாகுபடி காலங்களில் வயல் வேலைக்கு சென்று கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வருகிறது.

ஏழை மாணவன்


இந்நிலையில் புதிதாக வீடு கட்ட வசதி இல்லாத நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் உதவும் மனப்பான்மையை அறிந்த மாணவர் வேல்முருகன் தங்களின் நிலை குறித்து வாட்ஸ் அப் வாயிலாக ஆட்சியருக்கு ஒரு மனுவை அளித்தார். தன் படிப்பு நிலை, வாங்கிய பரிசுகள், தங்களின் வீட்டு நிலைமை குறித்து தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வடக்கூர் கிராமத்துக்கு நேரில் வந்து மாணவனின் இருப்பிடத்தை ஆய்வு செய்தார். அதில் அவர் வசித்த இடத்தின் அருகே சொந்தமாக சிறிய அளவில் நிலம் இருந்தது.

இதில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கலாம் என்று எண்ணிய ஆட்சியர் இதற்காக மாணவர் வேல்முருகனை பசுமை வீட்டுக்கு விண்ணப்பிக்க வைத்தார். அதன் பேரில் வீடு கட்டும் ஆணை வந்தது. அரசு சார்பில் மானியமாக ரூ.1.80 லட்சம் வீடு கட்ட கிடைத்தது.

இருப்பினும் படிக்கும் மாணவருக்கு நல்லமுறையில் வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்த ஆட்சியர் கூடுதல் தொகை தேவைப்பட்டதால் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்துவிடம் இதுகுறித்து தெரிவித்தார்.

அவரும் வீடு கட்ட மீதம் ரூ‌. 3.70 லட்சம் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் வழங்குவதோடு வீடு முழுவதும் கட்டிக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். 2 மாதத்தில் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

இதை அடுத்து கட்டி முடிக்கப்பட்ட வீட்டை கடந்த வாரத்தில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து வீட்டை திறந்து வைத்தார். அது மட்டுமல்லாமல் மாணவனின் கல்லூரி மேல் படிப்புக்கான செலவையும் மதர் தெரசா பவுண்டேஷன் சவரி முத்து ஏற்றுக்கொண்டார். இருக்க இடமும், படிக்க படிப்பிற்கும் உதவி செய்த ஆட்சியர் மற்றும் மதர் தெரசா பவுண்டேஷனுக்கு மாணவர் வேல்முருகன் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்து கொண்டார்.

வாழும் கடவுள் தஞ்சை ஆட்சியர்:

எங்களது ஏழ்மை நிலையை அறிந்து வீடு கட்டி கொடுத்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எங்களுக்கு வாழும் கடவுளாக தெரிகிறார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளோம். நான் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று ஆட்சியர் போல் அனைவருக்கும் உதவி செய்வேன். அவரின் படிப்பிற்கு, நிதி உதவி வழங்கிய மதர் தெரசா பவுண்டேஷனுக்கும் நாங்கள் காலம் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளோம் என்றார் மாணவன் வேல்முருகன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி