ஹோம் /தஞ்சாவூர் /

தலைமுறைகளாக ‘வி’ எழுத்தில் பெயர் வைக்கும் விநோத தஞ்சை கிராமத்தினர்.. எல்லாத்துக்கும் காரணமாக திகழும் காசவளநாடு வில்லாயி அம்மன்..

தலைமுறைகளாக ‘வி’ எழுத்தில் பெயர் வைக்கும் விநோத தஞ்சை கிராமத்தினர்.. எல்லாத்துக்கும் காரணமாக திகழும் காசவளநாடு வில்லாயி அம்மன்..

வில்லாயி

வில்லாயி அம்மன் கோவில், தஞ்சை மாவட்டம்

Thanjavur Kasavalanadu Villayi Amman | தஞ்சாவூரிலிருந்து மருங்குளம் செல்லும் சாலையில் 10 வது கிலோ மீட்டரில் உள்ளது வேங்கராயன்குடிக்காடு கிராமம். இக்கிராமத்தின் நடு நாயமாக குடிகொண்டு வேண்டுவோருக்கு வேண்டுமான அருளை வாரி வழங்கி வருகிறார் வில்லாயி அம்மன்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சை மாவட்டம் காசவளநாட்டின் மேற்கு எல்லையில் வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் வில்லாயி அம்மன், எட்டு திசைகளிலும் வாழ்ந்து வரும் இக்கிராமத்தில் பிறந்த பெண்களை, தன் வீட்டு பெண்ணாக அவர்களுடனேயே இருந்து இன்றளவும் காத்தருளி வருகிறார்.

தஞ்சாவூரிலிருந்து மருங்குளம் செல்லும் சாலையில் 10 வது கிலோ மீட்டரில் உள்ளது வேங்கராயன்குடிக்காடு கிராமம். இக்கிராமத்தின் நடு நாயமாக குடிகொண்டு வேண்டுவோருக்கு வேண்டுமான அருளை வாரி வழங்கி வருகிறார் வில்லாயி அம்மன்.

18 கிராமங்களை உள்ளடக்கிய காசவளநாட்டின் வித்தியாசமாக பெயரை கொண்டவள் தான் இந்த வில்லாயி. ஊரையும், ஊர் மக்களையும் காக்கும் இந்த அம்மனின் பெயரை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தங்களது குழந்தைகளுக்கு இன்றளவும் இக்கிராம மக்கள் சூட்டி, வில்லாயி அம்மனிடம் தன் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர். அதே போல் பெண் குழந்தைகளுக்கு வில்லம்மாள், வில்லாயி எனவும் ஆண் குழந்தைகளுக்கு வில்லப்பன் எனவும் பெயர் சூட்டி வருகின்றனர். பெண்கள் திருமணமாகி சென்றதால், தற்போது இந்த கிராமத்தில் மட்டும் ஏராளமான வில்லப்பன்கள் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

"வி" பெயர்கள் - காரணம் என்ன?

அதே போல் பெயர் சூட்டுவதில் ஏற்பட்ட நாகரீக மாற்றம் வந்தாலும், அதை கருத்தில் கொண்டு இக்கிராம மக்கள் அம்மனின் முதல் எழுத்தான "வி" என்ற எழுத்தை குழந்தைகளுக்கு வரும்படி பெயர் வைத்து சூட்டுகின்றனர். அதே போல் பிறந்த குழந்தைகளுக்கு முதல் முடிகாணிக்கையும் இந்த கோயில் சன்னதியிலேயே வேண்டுதலாக இறக்கப்படுகிறது.

வில்லாயி அம்மன் கோவில், தஞ்சை மாவட்டம்

இந்த ஊரில் பிறந்த பெண்கள் எங்கு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும், பொங்கல் உள்ளிட்ட திருவிழாவின் போது ஊருக்கு வந்து வில்லாயி அம்மனுக்கு மாவிளக்கு போட்டும், தீபம் ஏற்றியும் தங்களுடைய பிரார்த்தனையை முன்வைத்தும், வேண்டுதல் நிறைவேறிய பின்னர் அதற்கான காணிக்கைகளையும் செலுத்தி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க : மராட்டிய மன்னர் மனதை கவர்ந்த தஞ்சை ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா?

ஆண்டுதோறும் மார்கழி மாதம் 30 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் இவ்வூர் மட்டுமில்லாமல் வெளியூரைச் சேர்ந்தவர்களும், வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். மார்கழி மாதத்தில் நள்ளிரவில் கோயில் பூசாரி வீடுதோறும் வந்து சங்கு ஊதி, பாட்டுப்பாடி வில்லாயி அம்மன் எப்போதும் உங்களுடனே இருக்கிறாள் என பல்வேறு நல்ல செய்திகளை கோணாங்கி போன்று கூறிவிட்டு செல்வார்.

பொங்கல் திருவிழாவின் மூன்றாம் நாளான மாடு விடும் நிகழ்ச்சியின்போது, இவ்வூரில் பிறந்த பெண்கள் பலரும் வந்து வில்லாயி அம்மனை வழிபட்டு செல்வதுண்டு. அதே போல் இவ்வூரில் வசிக்கும் மக்கள் வில்லாயி அம்மனிடம் வேண்டிக் கொண்டு முடிகாணிக்கை, தாணியங்கள் காணிக்கை, ஆடு, மாடு, கோழி என காணிக்கைகளை செலுத்துவண்டு. அன்றைய தினம் இவ்வூர் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

வில்லாயி அம்மன் கோவில், தஞ்சை மாவட்டம்

இவ்விழாவைத் தொடர்ந்து பங்குனி உத்திர விழாவும் இவ்வூரில் சிறப்பு பெற்று விளங்குகிறது. இவ்வூரிலிருந்து பால்குடம், காவடி எடுத்துக் கொண்டு காசவளநாட்டுக்கே சொந்தமான கோவிலூர் ஜெம்புகேஸ்வரர் கோயிலுக்கு சென்று அங்கு தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் சுப்பிரமணியருக்கு நேர்த்தி கடன் செலுத்துவண்டு. பின்னர் அங்கேயே இவ்வூர் சார்பாக பல்வேறு குழுக்களாக அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க : பித்ரு தோஷம் நீங்க தஞ்சாவூரில் வழிபட வேண்டிய கோவில்

சிறப்புவாய்ந்த நல்லேர் பூட்டும் நிகழ்வு

அதே போல் தமிழ் வருட பிறப்பு அன்று வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் நல்லேர் பூட்டும் நிகழ்வு இந்த கிராமத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விவசாயம் நல்லபடியாக செழிக்க வேண்டும் என்பதற்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு நவதாணியங்களை விதைத்து சிறிது பரப்பளவில் நல்லேர் பூட்டி கொண்டாடிய பின், அந்த ஏர் கலப்பைகளை வில்லாயி அம்மன் கோயிலுக்கு முன்பு கொண்டு வந்து வைத்து, அம்மனிடம் ஆசி பெற்று செல்லும் வழக்கம் தற்போது வரை கடைபிடித்து வருகின்றனர் அவ்வூர் மக்கள்.

திருமண தடை, மாங்கல்ய தோஷம்:

பல்வேறு பெருமைகளை தன்னுள்ளே கொண்டு அருள்பாலித்து வரும் வில்லாயி அம்மனுக்கு கடந்த 2019 ம் ஆண்டு, முழுவதும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு, மகாகும்பாபிஷேம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு பிறகு இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.வெள்ளிக்கிழமை மாலை வாரந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகளை பெண்கள் சார்பில் நடத்தப்பட்டு, அன்றைய தினம் கோயில் வளாகத்திலேயே தங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என பெண்களால் நம்பப்பட்டு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க :  புவிசார் குறியீடு பெற்ற துணிகளில் கதை சொல்லும் கலம்காரி ஓவியம்

அதே போல் திருமண தடை, மாங்கல்ய தோஷம், புத்திரபாக்கியம், உடல் நலக்கோளாறு ஆகியவற்றுக்காக மாதந்தோறும் பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜையும், யாகமும் இக்கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது.

பண்டிகை & விஷேச நாட்கள்:

ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நாளில் வில்லாயி அம்மனுக்காக பால்குடம், காவடி, பறவை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக இவ்வூரின் புனித தீர்த்தமான காசாம்பள்ளம் என்ற திருக்குளத்திலிருந்து பால்குடம் எடுத்துக் வந்து ஊர் முழுவதும் உலா வந்து பின்னர் வில்லாயி அம்மனுக்கு பாலபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, திருவிளக்கு பூஜை, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி என ஆண்டு முழுவதும் வில்லாயி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை இக்கிராம மக்கள் நடத்தி, அம்மனின் அருளை பெறுகின்றனர். நீங்களும் ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்து அம்மனின் அருளை பெற்று செல்லுங்கள்.=

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur