மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதிலிருந்து சோழர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு தமிழ்ச் சமூகம் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர். குறிப்பாக, பொன்னியின் செல்வன் நாவலின் முதன்மை கதாபாத்திரமான ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருன்மொழி வர்மன் குறித்து பலரும் தேடிப் படித்துவருகின்றனர்.
மாமன்னன் ராஜராஜ சோழனை பெரும்பாலான கல்வெட்டுகள் அருண்மொழி எனக் குறிப்பிடுகின்றன. தஞ்சைப் பெரியகோயிலின் இரண்டாம் வாயிலான ராஜராஜன் கோபுர வாயில் கல்வெட்டில் அருண்மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ராஜராஜசோழனுக்கு 42 சிறப்புப் பெயர்களும் சூட்டப்பட்டன. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள்மொழி, அழகிய சோழன், இரணமுகபீமன், இராஜாச்ரயன், சோழேந்திரசிம்மன், இராஜமார்த்தாண்டன், இராஜேந்திரசிம்மன், இராஜவிநோதன், இரவிகுல மாணிக்கன், இரவிவம்ச சிகாமணி, இராஜ கண்டியன், இராஜ சர்வக்ஞன், இராஜராஜன், இராஜகேசரிவர்மன், உத்தமசோழன், உத்துங்கதுங்கன், உய்யகொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், திருமுறை கண்ட சோழன், தெலிங்ககுல காலன், நிகரிலி சோழன், நித்யவிநோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்கரமாபரணன், சண்ட பராக்ரமன், சத்ரு புஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைல குலகாலன் என்று சிறப்பு பெயர்களால் ராஜராஜ சோழன் அழைக்கப்பட்டார்.
நிர்வாகம், வலிமையான ராணுவப்பிரிவுகள் என்று மிகத் திறமையாக ஆட்சிப்புரிந்த ராஜ ராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன், இராஜவிநோதன், பண்டித சோழன், பெரிய பெருமாள், ஜனநாதன் ஆகிய பட்டங்களின் ஒட்டுமொத்தமான உருவம்தான் தஞ்சைப் பெரியகோயில் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூடியதும் முதல் முறையாகச் சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார்.கி.பி988 ஆம் ஆண்டில் கேரள நாட்டில் திருவனந்தபுரம் அருகேயுள்ள காந்தளூர்ச்சாலை மீது படையெடுத்தார்.
கடற்கரைப்பட்டினமான காந்தளூர்ச்சாலையில் கடும் போரிட்டுச் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனை வெற்றி வாகை சூடிய ராஜராஜ சோழன் மலைநாட்டை தன் வசமாக்கினார். பின்னர் சேர நாட்டுக்குச் செல்லும் வழியில் பாண்டிய நாட்டை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கும்போது பாண்டிய மன்னன் அமரபுயங்கன் போரிட்டதால் அவரையும் வென்றார் ராஜராஜசோழன்.
ஒரே நேரத்தில் பாண்டிய மன்னனையும்,சேர மன்னனையும் வென்று வெட்டிக் கொடி நாட்டினார். இது ராஜராஜ சோழன் தலைமையேற்றுச் சென்று பெற்ற பெரும் வெற்றி நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சிறப்பின் காரணமாகவே ராஜராஜ சோழனுக்கு கேரளாந்தகன் என்ற அடைமொழி சூட்டப்பட்டது. இதன் நினைவாகவே, தஞ்சை பெரியகோயிலின் நுழைவிடத்தில் முதலாவதாக உள்ள கோபுரத்துக்கு கேரளாந்தகன் திருவாயில் எனப் பெயரிடப்பட்டது.
கல்லணைக் கால்வாய் பாசன வாய்க்கால் புனரமைப்பு - கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur