சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூக்கு மன்னார்குடியில் சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், யார் இந்த லிகுவான் யூ, அவருக்கும் மன்னார்குடிக்குமான தொடர்பு என்ன என்பன குறித்து இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.
சிங்கப்பூரின் தந்தை என்றும் நவீன சிற்பி என்றும் அழைக்கப்படுபவர் லீ குவான் யூ 1965 ஆம் ஆண்டு, மலேசியாவில் இருந்து தனி நாடாக சிங்கப்பூர் பிரிந்தபோது, குறுகிய காலத்தில் பொருளாதர வளர்ச்சி, கட்டுமானம், தொழில்துறை, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து என பல துறைகளில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி காட்டியவர்.
சிங்கப்பூரின் இந்த ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழர்கள். இதனால் அவர்களின் மீது அளவு கடந்த நேசம் வைத்திருந்த லீ குவான் யூ, சீன மொழிக்கு நிகராக தமிழுக்கு, ஆட்சி மொழி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் அளித்திருந்தார்.
தமிழர்களின் அறிவாற்றலுக்கும் உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து மதிப்புடன் நடத்தியவர் என்று தற்போது வரை போற்றப்படுகிறார். இதுவே, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என பல முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் தொடர காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சிங்கப்பூரின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பெரும்பாலோனோர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள். பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக் கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, மேலவாசல், ஆலங்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள் கட்டுமான பணியாளர், துறைமுக பணியாளர், வியாபாரிகள், பொறியாளர் என பல்வேறு படிநிலைகளில் பணியாற்றி உள்ளனர்.
இதன் தாக்கமாக, இப்பகுதி மக்கள், லீ குவான் யூவை தங்கள் தலைவராக ஏற்று மாறாத பற்றும் அன்பும் கொண்டவர்களாக கொண்டாடி வருகின்றனர். அவரது மறைவின் போது, மண் வீட்டில் வசித்த தங்களை மாடி வீட்டில் வாழ வைத்த தெய்வமே என்று பேனர் வைத்தும் போஸ்டர் அடித்தும் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
இந்த அன்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், லிகுவான் நினைவாக நூலகமும் சிலையும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுவர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. மன்னார்குடி அருகில் உள்ள தளிக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர் இவர், தங்கள் பகுதியில் லீ குவான் யூ வை கௌரவிக்கும் விதத்தில் சிலை அமைக்கப்படும் என ஏற்கனவே பொதுமக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.
மேலும் படிக்க... தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்... அனல் காற்றால் மக்கள் அவதி..!
அதன், அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Singapore, Thanjavur