கார்த்திகை தீப விழாவுக்காக தஞ்சை பெரிய கோயிலில் எரிந்த சொக்கப்பனை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.
சொக்கப்பனை:
கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `சொக்கப்பனை வைபவம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்குவிழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. `பூலோக கற்பக விருட்சம்’ என்று புராணங்கள் பனைமரங்களைப் போற்றுகின்றன. பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக் காம்புகள் நார் எடுக்க, நுங்கு உணவாக, பனையின் பாலைபதநீர் தயாரிக்க, மரக்கட்டை அடுப்பு எரிக்கஎன்று பனையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால்தான் இதை `பூலோகக் கற்பக விருட்சம்’ என்று கூறுவார்கள். பல்வேறு தலங்களில் பனைமரம் தலமரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருக்கார்த்திகை தினத்தன்று பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து கோயிலுக்கு முன்பு வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றிலும் பனை ஓலைகளைப் பிணைத்துக்கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக் கூம்புக்கு முன்பு சுவாமி எழுந்தருளுவார். அவருக்குத் தீபாராதனை காட்டி முடித்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும்.அந்த ஜோதியையே கடவுளாக எண்ணி மக்கள் வழிபடுவார்கள். சுமார் முப்பது அடி உயரத்துக்குக் கூட சொக்கப்பனை செய்து கிராமங்களில் கொளுத்தப்படும்.இதற்கு பெயர் தான் சொக்கப்பனை.
தஞ்சை பெரிய கோயிலில் சொக்கப்பனை:
இதற்கு முன்னதாக பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில்நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னியை லிங்கமாக பக்தர்கள் வணங்கினர். மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போட்டு வெடித்தனர். சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Local News, Tamil News, Thanjavur