ஹோம் /தஞ்சாவூர் /

எப்ப சார் கடையை கட்டுவீங்க.. தஞ்சை மீன் மார்க்கெட் சிக்கலால் வியாபாரிகள் கடும் அவதி

எப்ப சார் கடையை கட்டுவீங்க.. தஞ்சை மீன் மார்க்கெட் சிக்கலால் வியாபாரிகள் கடும் அவதி

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தற்காலிக மீன் மார்க்கெட் 

தஞ்சையில் மீன் மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இதுவரை கட்டிதராததால் வியாபாரிகள் கடும் அவதி 

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் கீழ வாசலில் இருந்து மார்கெட் மாநகராட்சியால் முழுவதும் இடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இதுவரை புது கடைகள் கட்டிதராததால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சை கீழவாசலில் மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. காவிரி டெல்டாவின் முக்கிய மீன் சந்தையான இந்த மீன்மார்க்கெட்டுக்கு நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம், சென்னை மற்றும் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடல் மற்றும் உள்நாட்டு மீன் வகைகள் வருகின்றன. கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து, தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் உயிர் கெண்டை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கும் மீன்கள் அனுப்பப்படுகின்றன. கீழவாசல் சரபோஜி சந்தையின் ஒரு பகுதியில் முதலில் மீன்மார்க்கெட் செயல்பட்டது. ஆனால் இந்த மீன் சந்தை, இடப்பற்றாக்குறை, துர்நாற்றம், சுகாதார சீர்கேடுபோன்ற காரணங்களுக்காக இடம் மாற்ற முடிவு செய்து, சற்றுத் தொலைவில் உள்ள ராவுத்தாபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2001-ல் புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டது.

7 ஆண்டாக மூடிக்கிடந்தது:

இங்கு முறையாக வியாபாரம் இருக்காது என கூறி வியாபாரிகள் முதலில் மறுத்தனர். இதனால் கட்டிடம் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக மார்க்கெட் மூடியே கிடந்தது. எல்லா வசதிகளையும் செய்து தருவதாகவும், சுத்தம், சுகாதாரம் பாதுகாக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம், உறுதியளித்ததை அடுத்து 2008-ல் வியாபாரிகள்புதிய மீன் சந்தைக்கு இடம் மாறினர்.

மீன் மார்க்கெட்

அதன்படி புதிய மீன்மார்க்கெட்டில் 56 சில்லறை விற்பனை கடைகளும், மொத்த (ஏல) வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வெட்டும் தொழிலாளர்கள் செயல்பட்டு வந்தனர். அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை மீன்மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

கடைகள் இடிப்பு

இங்கு தற்போது தினமும் 8 முதல் 10 டன் மீன்கள் விற்பனைக்கு வரும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் 20 முதல் 30 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வரும். கொரோனா காலக்கட்டத்தில் மீன்சந்தை மூடப்பட்டு கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திலும், பின்னர் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை பகுதியிலும் இயங்கியது. அதன் பின்னர் மீன் மொத்த வியாபாரம் கீழவாசல் பகுதியிலும், சில்லறை விற்பனை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகேயும் இடமாற்றப்பட்டது.

மேலும் மீன் மார்க்கெட்டில் புதிதாக கடைகள், விற்பனை பகுதி, மீன்வெட்டும் இடத்தில் இருக்கும் வகையில் புதிதாக கட்டுவதாக மாநகராட்சி அறிவித்து பழைய கடைகளை இடிக்க முடிவு செய்தது. அதன்படி மீன்மார்க்கெட்டில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு 8 மாதம் ஆகி விட்டது. ஆனால் புதிதாக கடைகள் கட்டுவதற்கான எந்த பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை.

அலைமோதும் கூட்டம்:

தற்போது தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் போதிய இல்லாமல் வியாபாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இருக்கும் கொஞ்ச இடத்தில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மீன்களை சிலர் திருடியும் செல்கின்றனர் என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மீன் மார்க்கெட்

மேலும் இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், “எட்டு மாதங்கள் ஆகியது தற்காலிக கடை என்றுதான் சொன்னார்கள் ஆனால் இதையே நிரந்தரமாக ஆக்கி விடுவார்களோ என்று பயம் எழுந்துள்ளது. இதுவரை புதிய கடைகள் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. கழிப்பறை வசதி கூட இல்லாமல் இந்த இடத்தில் நாங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். அருகிலே இருக்கும் மதுபான கடையால் டிராபிக் அதிகமாக இருக்கிறது இதனால் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.

கடைகளுக்கு மீன் வாங்க வரும் பொதுமக்களிடம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டத்தில் வியாபாரம் செய்து வருகிறோம். தயவு செய்து புதிய கட்டிடம் அமைத்து தருவதற்கான ஏற்பாடுகளை செய்து விரைவில் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Ramprasath H
First published: