தஞ்சை பெரியகோயிலை கட்டிய ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை கண்டுள்ளார். இவை அனைத்தும் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் அவரது மெய்க்கீர்த்திகளாக இடம்பெற்றுள்ளது. அவை என்னென்ன என்பதையும் மெய்க்கீர்த்தி என்ன என்பதையும் இத்தொகுப்பில் காணலாம்.
பழங்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் அவர்களின் பரம்பரையை பற்றிய புகழுரைகளுடன் ஆரம்பிப்பது தான் வழக்கமாக இருந்து வந்தது.
கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தை
பெறுவதற்காக ஏகப்பட்ட புகழுரைகளை அதில் கூறியிருப்பர். வெற்று புகழுரைகளை விட்டு மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக) பொறிக்கும் வழக்கம். முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.
மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டு கல்வெட்டுகளிலிருந்து, அதாவது பொயு 993ம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள், அவர்களது ஆட்சிக்காலத்தில், மன்னர்கள் அடையும் வெற்றிகளை வைத்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது எந்த ஆண்டுகளில் எந்த நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன என்பதை அறிய செய்கிறது.
ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி எனத் தொடங்கி நீண்டு செல்கிறது மெய்க்கீர்த்தி. மங்கல ஒலியான ஸ்வஸ்திஸ்ரீ என்ற அடைமொழியோடு தொடங்கும் இந்த மெய்க்கீர்த்தி என்ன கூறுகிறது என்றால் திருமகள் போல பெருநலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள்ள', அதாவது திருமகள் எப்படி ராஜராஜனுடன் இருக்கிறாளோ அதேபோல, பெருநலச் செல்வியான நில மாதையும் தனக்கு
உரிமையாக்கிக்கொள்ள நினைத்து, 'காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி' - மெய்க்கீர்த்தியின் இந்த வரி பெரும் ஆராய்ச்சிகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. ராஜராஜன் அடைந்த முதல் வெற்றியாக காந்தளூர்ச்சாலை
வெற்றியை இது குறிக்கிறது.
ஆனால் காந்தளூர்ச்சாலை என்பது என்ன, கலமறுத்தருளி என்றால் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள், இது திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள ஒரு கடற்படைத் தளம் என்றும், சேரர்களின் கடற்படை பலத்தை அழிக்கும் ஒரு பகுதியே இந்த காந்தளூர்ச்சாலை கலம், அதாவது கப்பல்களை அழித்த நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் சிலரோ சாலை என்பது போர்ப்பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றைக்குறிக்கும். பயிற்சிப்பள்ளிகளை அழித்து சேரர்களின் வலுவை ராஜராஜன் அழித்ததே இது என்று கூறுகின்றனர்.
இதற்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்களில் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ, ராஜராஜன் அடைந்த முதல் முக்கிய வெற்றி இந்த காந்தளூர்ச்சாலை கலம் அறுத்தது. அடுத்து ராஜாராஜன் அடைந்த வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, வேங்கை நாடு,
அதாவது கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கிடையே உள்ள கீழைச்சாளுக்கியர்களின் வேங்கி நாட்டு வெற்றி, அதற்கடுத்து கர்நாடகாவில் மைசூருக்குத் தெற்கே கங்கர்களின் நாடான கங்கபாடி, அவர்களின் சிற்றரசான நுளம்பபாடி,மைசூருக்கு அருகில் உள்ள இன்னொரு அரசான தடிகைபாடி, குடமலை நாடு ஆகிய இடங்களில் அடைந்த வெற்றிகள்.
பிறகு சேரநாட்டிலுள்ள கொல்லம், இன்றைய ஒரிசாவின் தென்பகுதியான கலிங்க நாடு ஆகிய இடங்களை வெற்றிகொண்டது. சிங்களவர்களின் நாடான இலங்கை வெற்றி, இன்றைய மகாராஷ்ட்டிர மாநிலத்தின் தென்பகுதியான இரட்டை பாடி ஏழரை இலக்கம் என்ற நாடு ஆகிய நாடுகளை வெற்றி கொண்டதை இந்த மெய்க்கீர்த்தி குறிக்கிறது. மாலத்தீவுகளை ராஜராஜன் வெற்றி கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் கடற்படை அடைந்த முதல் முக்கியமான வெற்றி இது. இந்தப் படையெடுப்பு, சோழ நாட்டு வணிகர்களைப் பாதுகாக்கும் முகமாகவே நடைபெற்றிருக்க வேண்டும்.
இந்த வெற்றிதான்பின்னால் ராஜேந்திரன் கடாரம் கொள்வதற்கு அடிகோலியது. இத்துடன் ராஜராஜனின் வெற்றிச் செய்திகள் நிறைவடைகின்றன. அப்படிப்பட்ட 'திறன்மிக்க வெற்றிகளை அடையக்கூடிய படைகளைக் கொண்ட அவர் வாழ் நாளில் எல்லா ஆண்டும் (அவரை) வணங்கக் கூடிய ஆண்டே, செழியர்களான பாண்டியர்களை ஒளி குன்றச் செய்த ராஜகேசரி ராஜராஜ தேவருக்கு என்று மெய்க்கீர்த்தி ராஜராஜனைப் புகழ்ந்துரைக்கிறது.
இந்த மெய்க்கீர்த்தியின் இன்னொரு சிறப்பம்சம், ராஜராஜன் அடைந்த வெற்றிகளைக் குறிப்பிட்டாலும், தோல்வியடைந்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், நாடுகளின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விட்டுவிடுவதுதான். இந்த மெய்க்கீர்த்தி பரம வைரிகளான பாண்டியர்கள் மீது அடைந்த வெற்றிகளைக் குறிப்பிடும்போதும், பரம்பரைப் பெயரான 'செழியரைத் தேசுகொள்' என்று குறிப்பிடுகிறதே தவிர, அமரபுயங்கன் பெயரைக் குறிப்பிடாதது இங்கு கவனிக்க வேண்டியது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த வழக்கம் அவர் புதல்வரான ராஜேந்திரர் காலத்திலேயே மாறிவிட்டது. அவருடைய மெய்க்கீர்த்தியில் அவர் வெற்றிகொண்ட மன்னர்களின் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் மெய்க்கீர்த்திகளிலேயே ராஜராஜனுடையது தனித்தன்மை வாய்ந்தது ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore