தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது தான் தமிழர்களின் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும். இதில் ஒன்றுதான் அகப்பை பயன்படுத்தும் விதம். பொங்கல் திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட புது நெல்லினைக் கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் வைத்து பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கப்படும்.
அப்போது மண்பானையில் உள்ள அரிசியை கிளற அகப்பையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த அகப்பை தயாரிப்பதற்கு, தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர். அகப்பையை பயன்படுத்தும் போது, அதன் மனமும் பொங்கல் சுவையும் அதிமாகும். காலப்போக்கில் நாகரீகத்தின் வெளிப்பாடாக சில்வர், பித்தளை கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போனது.
ஆனால் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் அந்த கிராம மக்கள். இதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத் தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கலன்று காலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்கி விடுவார்கள்.
இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெறுவதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை - பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.
இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மு.கணபதி கூறியதாவது: எங்களது மூதாதையர் காலந்தொட்டு நாங்கள் தச்சுத் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம். இவ்வூரில் பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் இறங்கிவிடுவோம்.
இதற்காக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் கொட்டாங்குச்சியை சேகரித்து வைத்து பின்னர் அதனை பொங்கல் நெருங்கும் நாட்களில், நான்கைந்து தினங்கள் தண்ணீரில் ஊறவைத்து அதனை உளியால் பக்குவமாக செதுக்குவோம். மூங்கில் மரத்தினை வெட்டி அதில் இரண்டடி துண்டுகளாக நறுக்கி கைப்பிடி தயாரித்து பின்னர் அதில் கொட்டாங்குச்சியை இணைத்துவிட்டால் அகப்பை தயாராகிவிடும்.
தஞ்சாவூரில் துணிவு கொண்டாட்டம்.. நள்ளிரவில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
இந்த அகப்பையை நாங்கள் யாரும் விலைக்கு விற்பனை செய்வதில்லை. எங்களது கிராம மக்களுக்கு பொங்கலன்று பயன்படுத்த இதை தான் வழங்குகிறோம். நாங்கள் காலையிலேயே வீடு வீடாக சென்று கொடுத்துவிடுவோம்.
பின்னர் பொங்கலன்று மதியம் எந்தந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், பழம், வெற்றிலை - பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கவுரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதால் நாங்கள் இந்த தொழிலை மகிழ்வோடு செய்து வருகிறோம் என்றார்.
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur