ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும் இதை ஏறு தழுவுதல் என்றும் அழைப்பார்கள். பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஆண்டுதோறும் தை மாதம் தொடங்கும் இந்த ஜல்லிக்கட்டு விழா தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை தொந்தரவு செய்வதாக கூறி இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் முந்தைய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி வழக்கு தொடுத்தது. அதனையடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
அதனையடுத்து, தமிழ்நாட்டில் கொந்தளித்த போராட்டத்தின் காரணமாக சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் பலர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் பெண்மணி ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவருடைய மகன் ஒரத்தநாடு பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வரும் நிலையில் மாடுகளை பராமரிக்க நேரமில்லாததால், இவரும் இவர் கணவரும் வளர்த்து வருகின்றனர்.
இவரது கணவர் விவசாய வேலைக்காக வெளியில் செல்லும் நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனி ஆளாகவே காளைகளை தனது பிள்ளை போல் பார்த்து பார்த்து வளர்த்து வருகின்றார்.
இந்தப் பெண் என்ன சொன்னாலும் காளை கேட்கும். ஏறு தழுவும் போது மற்றவரிடம் துள்ளி குதிக்கும் காளை வளர்ப்பவரிடம் குழந்தைதான் என்பதற்கு இந்த காளை சான்றாக விளங்கி வருகிறது.
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் பெரிதளவில் வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் இது நமது பாரம்பரியம் என பலர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து பேசிய ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் பெண், ‘என் பையன் டிராவல்ஸ் வைத்து நடத்துகிறார். அவர் பெரிதளவில் வீட்டில் இருக்க மாட்டார் ஜல்லிக்கட்டு நேரத்தில் காளைகளை களத்திற்கு கொண்டு செல்ல மட்டுமே வருவார். மற்ற நேரத்தில் நான் ஒரு ஆள் மட்டுமே இந்த காளைகளை தன் பிள்ளை போல் வளர்த்து வருகிறேன்.
காளைகளுக்கு சில நேரம் அதிக கோபங்கள் வரும். சில முறை அந்த கோபத்தை என்னிடமும் காட்டும். அடுத்த நொடியே குழந்தை போல் முகத்தை மாற்றும் என்னிடம் மட்டும். ஆரம்பத்தில் பெரிதும் பயம் இருந்தது. எப்படி வளர்க்க போகிறோம் என்று. தொடக்கத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் தற்போது எனது நண்பன் போல் ஆகிவிட்டது. முழுவதும் மாடுகளை கவனிப்பதில் தான் என் பொழுதும் கழிகிறது.
எங்களிடம் 3 காளைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு காளைக்கு சுமார் 500 ரூபாய் வரை செலவு ஆகிறது. ஜல்லிக்கட்டு நேரத்தில் கிடைக்கும் சில சொற்ப பரிசுகளுக்காக வேண்டி இந்த காளைகளை நாங்கள் வளர்க்கவில்லை. இது நம் உணர்வு, அந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டது. என் மகன் அறிவுறுத்தலின் படி தொடர்ந்து நானும் இந்த காளைகளை வளர்த்து வருகிறேன்’ என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur