Home /thanjavur /

Thanjavur | தாயின் மறைவிலும் சோர்வடையாமல் கராத்தேவில் சர்வதேச சாதனைகளைப் படைக்கும் பேருந்து ஓட்டுநரின் மகள்

Thanjavur | தாயின் மறைவிலும் சோர்வடையாமல் கராத்தேவில் சர்வதேச சாதனைகளைப் படைக்கும் பேருந்து ஓட்டுநரின் மகள்

தஞ்சை

தஞ்சை கராத்தே மாணவி

தஞ்சாவூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரின் மகள் கராத்தே, சிலம்பம் என இரண்டிலும் பதக்கங்களைக் குவித்துவருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
உள்ளூர் முதல் உலகம் வரை நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்று பதக்கத்தை தனதாக்கி வெற்றி என்ற அம்மாவின் கனவை நனவாக்கி வருகிறார் தஞ்சை மாணவி.

தஞ்சை மாவட்டம் பிள்ளையார் பட்டியைச் சேர்ந்த மாணவி நித்யஸ்ரீ. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுஅம்மாவின் கரம் பிடித்து சிலம்ப ஆசான் ராஜேஷ்கண்ணா பயிற்சி கூடத்திற்கு வந்த நித்யஸ்ரீ இதுவரை சிலம்பம், கராத்தே இரண்டிலும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவு, சர்வதேச அளவு என்று 36 தங்கப்பதக்கம், சான்றிதழ்கள், கோப்பைகள், 10 வெள்ளிப்பதக்கம், 9 வெண்கலப்பதக்கம், கராத்தேவில் பிளாக்பெல்ட் என்று குவித்து தன் அம்மாவின் கனவை நனவாக்கி வருகிறார்.

பதக்கங்களுடன் நித்யஸ்ரீ


கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் இருந்து சிலம்பம், கராத்தேவில் சிறப்பாக செயல்பட்டதால் கலை இளமணி விருதை பெற்றுள்ளார். தன் தாயின் கனவை நினைவாக்கிய நித்யஸ்ரீக்கு ஒரு பெரும் இழப்பு கடந்த 2020ம் ஆண்டு நிகழ்ந்தது. அவரது அம்மா மலர் கொடி நெஞ்சுவலியால் இறந்த சம்பவம்தான் அது.

நித்யஸ்ரீ வென்ற பதக்கங்கள்


இருப்பினும் வாழ்ந்த நாள் முழுவதும் அன்பை கொடுத்து, அறிவை வளர்த்து, சாதனை மகளாக உருவெடுக்க வைத்த தாயின் எண்ணத்தை ஈடேற்ற இன்னும், இன்னும் என்று தற்காப்பு கலைகளில் தீவிரமும், மும்முரமும் காட்டி பதக்க மழையில் நனைந்து வருகிறார் நித்யஸ்ரீ.

பயிற்சியின் போது நித்யஸ்ரீ


கடந்த 2018ம் ஆண்டில் மலேசியாவில் சர்வதேச அளவில் நடந்த கராத்தே போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்று வந்துள்ளார். நாடு விட்டு நாடு சென்று பதக்கமும் சான்றிதழும் பெற்றுள்ளார்.

இன்றும் படிப்பு, பயிற்சி, கராத்தே அலுவலகத்திலும் பகுதி நேர வேலையும் செய்து கொண்டு அட்டகாசமாக பயணம் செய்து வரும் நித்யஸ்ரீ, தன் அம்மாவின் கனவை மேலும், மேலும் நிறைவேற்ற வேண்டும் என சிலம்பத்தை சுற்றியும், கராத்தேவில் கலக்கியும் பதக்க வேட்டையை தொடர்ந்து வருகிறார். இந்த வெற்றிக்கும், சாதனைக்கும் உறுதுணையாக பயிற்சி அளித்து வருகிறார் சிலம்ப ஆசான் ராஜேஷ்கண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய நித்யஸ்ரீயின் தந்தை, ‘நான் அரசு பேருந்து ஓட்டுனர். என் மகள் இவ்வளவு சாதனைகளை பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மனைவியின் ஆசையும் இதுதான். வீட்டு வேலை, கல்லூரி படிப்பு, கராத்தே, பயிற்சி, பகுதி நேர வேலை என சுழலுகிறாள் என் மகள். அவளின் முயற்சி தோற்கவில்லை. எனக்கு சிறு வயதில் கராத்தேவில் சாதிக்க ஆசை. குடும்ப சூழ்நிலை காரணமாக முடியவில்லை. ஆனால் என்னால் முடியாததை என் மகள் செய்தது பெறும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி