தமிழ்நாட்டில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்(20.03.2023) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொது மக்களின் குறிப்பாக மகளிர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமத்தொகையாக வழங்கும் திட்டத்தின் அறிவிப்பு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டம், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் வழங்கப்படவில்லை என்று இதர அரசியல் தலைவர்கள் விமர்ச்சித்து வந்த நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு குறித்து தஞ்சையில் உள்ள குடும்ப தலைவிகளின் கருத்தை பார்க்கலாம்:
சாரதா (தள்ளுவண்டி பழ வியாபாரி): குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 கொடுப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்கள் குடும்ப பொருளாதார பிரச்னையில் இந்த பணம் உதவிகரமாக இருக்கும். காலம் தாழ்த்தி தந்தாலும் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். அவரை நம்பி நாங்கள் ஓட்டு போட்டு இருந்தோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டார்.
வசந்தா (பூ வியாபாரம்): குடும்பபாரம் இந்த பணத்தால் சற்று குறையும். முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றி விட்டார். பூ வியாபாரம் செய்யும் எங்களுக்கு நிரந்தர வருமானம் என்று கிடையாது. இந்த தொகை குடும்பத்தின் தேவைக்கு உதவிகரமாக இருக்கும். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ராசாத்தி ( பெட்ரோல் பங்க் ஊழியர்): இது தேவையில்லாத திட்டம். குடும்பத் தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் எனக்கூறி மற்ற பொருட்களில் விலைகளை ஏற்ற மாட்டீர்கள் என என்ன நிச்சயம்?தற்போது சிலிண்டர் விலையே 1100 -யை தாண்டுகிறது.பெட்ரோல் 100 -யை தாண்டுகிறது.பத்து ரூபாய் இருந்த பால் விலையை தற்போது 12 ரூபாய்க்கு கொண்டு வந்திருக்கிறது.இருக்கும் பொருளின் விலையை குறைத்தாலே போதும். எங்களுக்கு இந்த 1000 ரூபாயும் தேவையில்லை, பெண்களுக்கு இலவச பஸ் பயணமும் தேவையில்லை.ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மறுபடி இந்த பணத்தை எங்கு சம்பாதிப்பீர்கள் மக்களிடம் தானே இதில் எவ்வளவு ஊழல் லஞ்சம் இருப்பது என்பது எங்களுக்கு எப்படி தெரியும் இது தேவையற்ற திட்டம் என்பதே என்னுடைய கருத்து என்றார்.
அய்யம்பாள் (கூழி விவசாயி):1000 ரூபாய் கொடுப்பது மகிழ்ச்சி தான். ஏதோ இருக்கும் கஷ்டத்தில் சற்று குடும்ப பாரத்தை கொஞ்சமாவது குறைக்கும். ஆனால், இதனால் மற்ற பொருட்களின் விலையை ஏற்றாமல் இருந்தால் நல்லது. ஏற்கனவே கல்வி கடன் தள்ளுபடி செய்வோம் என சொன்னீங்க அதை இன்னும் செய்யவில்லை,பேங்க்ல இருந்து கால் பண்ணி டார்ச்சர் பண்றாங்க. இருந்தாலும்வாக்குறுதியில் சொன்னது போல 1000 ரூபாயை அறிவித்தது மகிழ்ச்சிதான். முதல்வருக்கு நன்றி என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, Local News, Thanjavur