தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் வலியை புரிந்துக்கொண்டு அவர்கள் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பதற்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பெயர் பதிவு:
தமிழகத்தில் ஒரு பெண் தான் கருவுற்றதும் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து தன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது கிராமம் தோறும் வரும் மருத்துவப் பணியாளரிடம் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவிக்க வேண்டும். முதலில் கர்ப்பமான அந்த பெண் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்து சுகாதாரத் துறையின் மூலம் தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் மென்பொருளில் அவர்களுடைய அடையாளங்கள் அனைத்தும் பதிவேற்றும் செய்யப்படும். அதாவது ஆதார் எண், வங்கி கணக்கு, பெண்ணின் அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும் பின்னர் அந்தப் பெண்ணின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பையும் சுகாதாரத்துறை ஏற்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தையும் இலவசமாக அரசு மருத்துவமனையின் மூலம் பெற முடியும். கருவுற்றிருக்கும் காலத்தில் எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது மற்றும் உடல்நல பராமரிப்பு குறித்த தகவல்களை அந்தந்த சுகாதர நிலையத்தில் இருக்கும் செவிலியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதேபோன்று பிரசவ காலத்தில் தாய் வீடு செல்லும் பெண்கள் அந்த பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சைகளை அங்கும் தொடர முடியும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கர்ப்பிணி பெண்களுக்காக சிறப்பாக முகாமகள் நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவும் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் பெறுவது குறித்து ஆலோசனையும் வழங்கப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே தாய் சேய் அடிப்படை பராமரிப்புகள் காண அனைத்து வசதிகளும் உள்ளன.
பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் பெண்களுக்கு அவசர சிகிச்சையும், அறுவை சிகிச்சை செய்ய தேவைப்பட்டால் அதற்கும் வசதிகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் ஆகியவற்றை பரிசோதனை செய்யும் வசதியும் சிகிச்சையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கிடைக்கும். குழந்தை பிறந்த பின்பும் தாயின் ஆரோக்கியத்தை காக்க 11 வகையான சித்த மருத்துவ மூலிகை அடங்கிய மகப்பேறு சிகிச்சை பெட்டகம் வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சுற்றுலா வளைகாப்பு விழா 16 பொருட்கள அடங்கிய குழந்தை நல பட்டகம் என எண்ணற்ற நன்மைகளை கர்ப்பிணி பெண்களுக்காக அரசு மேற்கொண்டு வருகிறது.
தாய் சேய் இருவருக்கும் மிக அவசியமானது தடுப்பூசி. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை கட்டுப்படுத்த இரும்பு சத்து ஊசி உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளும் அரச மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் தடுப்பூசி குறித்து தென்காசி சுகாதார செவிலியர் பாப்பா தெளிவாக கூறினார்.
“ கர்ப்பம் தரித்ததில் இருந்து கர்ப்பிணி பெண்களை நாங்கள் பின் தொடர்ந்து அவர்களின் நீர் அளவு ரத்த அளவு சர்க்கரை அளவு அளவு போன்றவை வாரத்திற்கு ஒருமுறை கண்காணித்துக் கொண்டே இருப்போம். கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் ஆசிட் கொடுப்பது வழக்கம். போலிக் ஆசிட் கொடுப்பதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த சோகையை தடுக்கவும் குழந்தையின் வளர்ச்சிக்கும் முக்கியமாக இருக்கும்.
3 மாதம் முடிந்து 4வது மாத தொடக்கத்தில் டிடி தடுப்பூசி வழங்கப்படும். 7 மாதம் வரை மாதத்திற்கு ஒருமுறை மருத்துவர் ஆலோசனை செய்வது அவசியம். ஏழு மாதத்தில் இருந்து 8 மாதம் வரை வாரத்திற்கு இருமுறை மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். எட்டு மாதத்தில் இருந்து 9 மாதம் வரை வாரத்திற்கு ஒரு முறை மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.கர்ப்பிணி பெண்களுக்கு நாலு ஆறு எட்டு ஆகிய மாதங்களில் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை கண்காணிப்பதற்காக மற்றும் சர்க்கரை அளவு சீராக வைத்திருப்பதற்காகவும் இந்த ஸ்கேன் செய்வோம்.
ஐ பி வி போலியோ ஊசி போன்றவை தனியாரிடம் கிடையாது அரசிடம் மட்டுமே அது உண்டு அதனால் மக்கள் இங்கு வந்து போடுவதையே பெரும்பாலும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்மார்கள் அரசிடமே வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர்” என தெரிவித்தார்.
லட்சங்கள் கொட்டினாலும் தனியாரில் சரியாக பிரசவங்கள் நடக்கும் என்ற உத்திரவாதம் கிடையாது. ஆனால் அரசு மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதால் எவ்வளவு சிக்கலான பிரசவங்களையும் எளித்தல் பார்த்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றி விடுகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டு தான் அரசு மருத்துவமனையில் தாய் - சேய் இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளதை காட்டுகிறது.
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pregnancy, Pregnant, Tenkasi