முகப்பு /தென்காசி /

குற்றாலம் அருவிகளில் குளித்திருப்பீங்க... ஆனா வரலாற்றை போற்றும் இப்படி ஒரு இடம் இருக்குனு தெரியுமா?

குற்றாலம் அருவிகளில் குளித்திருப்பீங்க... ஆனா வரலாற்றை போற்றும் இப்படி ஒரு இடம் இருக்குனு தெரியுமா?

X
Coutrallam

Coutrallam folk art museum 

Courtallam | குற்றாலத்தில் நாட்டுப்புற கலை அகழ்வைப்பகம் பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் இருக்கும் நாட்டுப்புற கலை அகழ்வைப்பகம் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது.

இந்த அகழ்வைப்பகத்தில் பண்டைய காலத்து பொருட்களான முதுமக்கள் தாழி, சிலைகள், கல்வெட்டுகள், தமிழ் எழுத்துக்கள், ஆகியவை சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போதிய பராமரிப்பு இன்றி இடிந்த நிலையில் உள்ளன. மேலும் மின்சாரம் இல்லாத நேரத்தில் இந்த அருங்காட்சியகத்தை யாராவது பார்வையிட வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. ஏனெனில் இங்கு ஜெனரேட்டர் வசதி கூட இல்லை.

மின்சாரம் தடை செய்யப்பட்ட நேரத்தில் இருள் சூழ்ந்தே காணப்பட்டது. வரும் பார்வையாளர்கள் டார்ச் லைட் அடித்து தான் பார்வையிட முடியும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அகழ்வைப்பகத்திற்கு நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ஐந்து ரூபாய் விகிதம் செலுத்த வேண்டும். மேலும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் 30 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த அகழ்வைப்பகம் பழைய அருவி மற்றும் புலி அருவிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கின்றது. சீசன் நேரங்களில் அதிக கூட்டம் வருவதாகவும் மற்ற நேரங்களில் சிலர் மட்டுமே இந்த இடத்தை அடையாளம் கண்டு பார்வையிட வருவதாகவும் அருங்காட்சியகத்தில் உள்ள காவலாளர் தெரிவித்தார்.

தமிழக அரசு தொல்லியல் துறையின் கீழ் சேகரிக்கப்பட்ட பல பொருட்கள் மற்றும் புத்தகங்கள் இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நாங்கள் சென்ற நேரத்தில் இங்கு மின்சாரத் தடை செய்து இருந்ததால் டார்ச் லைட் அடித்துதான் பொருட்களை பார்வையிட முடிந்தது. அப்படி நாங்கள் பார்த்த சில அரிய வகை பொருட்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.

பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கூடைகள், தேன் சேகரிக்கும் கருவி, கொண்டை ஊசிகள், கால் சிலம்புகள், சைனீஸ் உருவ பொம்மைகள், மேலும் பல வகையான பானைகளின் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

பண்டைய காலத்து சிலைகள் சிலவற்றை இங்கு காண முடியும். இதில் ஆஞ்சநேயர், மதுரை வீரன், சிவன், முருகர் போன்ற கடவுள்களின் உருவ சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

நந்திகேஸ்வரரின் உடைந்த சிலை, ஆறுமுகம், கோவிலில் பயன்படுத்தும் விளக்குகள் என பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டவை குறித்த புத்தகங்கள் விற்பனைக்கு இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு பண்டைய காலத்து புத்தகங்கள் பலவற்றை விற்பனைக்காக வைத்திருக்கின்றனர். சிறிய நூலகம் ஒன்றும் இருக்கிறது, ஆனால் முறையாக புத்தகங்களை அமர்ந்து படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லாததால் இன்னும் மக்கள் பழக்கத்திற்கு கொண்டுவரப்படவில்லை.

குற்றால மலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் மழையில் நனைந்து அடையாளம் காண முடியாத நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் கிமு, கிபி இல் இருந்து வளர்ச்சி அடைந்த தமிழ் மொழியின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டிருந்தது. பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் பயன்படுத்திய செங்கல்லும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. யானையை ஒரு மிருகம் சாப்பிடுவது போன்ற சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதை பார்ப்பதற்கு யானையை விட பெரிய வலிமையான ஒரு விலங்கு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இருக்கக்கூடும் என்பதை அறிய முடிகிறது.

மோசமான பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘குற்றாலத்தில் இருக்கும் கேரளா பேலஸ் அருகாமையில் புதிய அகழ்வைப்பகம் கட்டுவதற்கான பணிகளை திட்டமிட்டு இருப்பதாக கூறினர். மேலும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றும் தெரிவித்தனர். சரியான பராமரிப்பின்றி நம் பண்டைய காலத்து வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை கண்டு மிகுந்த வேதனை அடைவதாகவும் விரைவில் இதை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய அகழ்வைப்பகம் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்து தெரிவித்தனர்.

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi