தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் உட்பட அனைவரிடமும் நற்பெயர் பெற்று சிறந்த கலெக்டராக செயல்பட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கடந்த 7 மாதமாக தென்காசி மாவட்டத்திற்காக பல நலத்திட்டங்களை விரைந்து செய்து முடித்தார் என்று மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆகாஷ் ஐஏஎஸ் மீண்டும் தென்காசி மாவட்ட ஆட்சியராகவே அமர்த்தப்பட வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக தென்காசி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும் அரசு இவரை பணி மாற்றம் செய்வதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்றும் போஸ்டர் அச்சிட்டு தென்காசி மாவட்டத்தில் பரவலாக ஒட்டி உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷை பணியில் அமர்த்திய 7 மாதத்தில் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் 11 கலெக்டர்கள் உட்பட 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தென்காசி 2019 நவம்பரில் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 2 வருடத்தில் 5 மாவட்ட ஆட்சியரா என்று மக்கள் மத்தியில் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. முதல் கலெக்டராக அருண் சுந்தர் தயாளன் தொடர்ந்து சமீரன், கோபாலசுந்தர்ராஜ் ஆகியோர் பணியாற்றினர். கலெக்டர் ஆகாஷ் ஜூன் 17ல் கலெக்டராக பொறுப்பேற்றார். 7 மாதங்கள் மட்டுமே அவர் பணியாற்றியுள்ளார். இருப்பினும் குறைந்த காலத்தில் விவசாயிகள் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினார்.
மேலும் சமீபத்தில் மாநில அளவில் சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருது பெற்றுள்ளார். குற்றாலம் மற்றும் செங்கோட்டையில் இயற்கையான அருவிகளின் குறுக்கே கட்டுமானங்கள் கட்டி நீர்வழிப் பாதையை தடுத்த நிறுவனங்கள் மீது நேரடியாக சென்று நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, மாவட்ட அளவில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேர்மையான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தினார். அதற்காக சி.சி.டி.வி., கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. தகுதியானவர்களை நியமனமும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி இன்றளவும் வளர்ச்சியில் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளது. மூன்று ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டது தற்போது 5வது கலெக்டரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக வருவோருக்கு அந்த மாவட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதற்குள் மாற்றப்பட்டால் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் குறைவே என்று இப்பகுதி மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi