முகப்பு /செய்தி /தென்காசி / ஆடு திருடிய விவகாரத்தில் பகை - பட்டப்பகலில் இளைஞரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற கும்பல்...

ஆடு திருடிய விவகாரத்தில் பகை - பட்டப்பகலில் இளைஞரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற கும்பல்...

கொலை செய்யப்பட்ட இளைஞர்

கொலை செய்யப்பட்ட இளைஞர்

Tenkasi Murder | தென்காசியில் ஆடு திருடிய விவகாரத்தில் பழிக்குப்பழியாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.25 வயதான மணிகண்டன் பொக்லைன் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.ஒரு கொலை வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் திங்கள் அன்று ஆஜரான மணிகண்டன் பிற்பகலில் தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று இரு சக்கர வாகனத்தை வழிமறித்து அரிவாளால் மணிகண்டனை வெட்டியது.இதை சற்றும் எதிர்பாராத அவர் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்து சாலையோரம் இருந்த ஒரு கடைக்குள் புகுந்தார்.எனினும் அந்த கும்பல் மணிகண்டனை பின்தொடர்ந்து வந்து கடைக்குள் வைத்தே அவரை வெட்டியது.

பின்னர் அவரை சாலையில் இழுத்து போட்டும் சரமாரியாக வெட்டினர்.இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் இறந்து விட்டதை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து உடனடியாக ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்... ரிப்போர்ட்டர் போர்வையில் அட்டூழியம்..

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் கொலைக்கான பல தகவல்கள் தெரியவந்தன.

2021-ம் ஆண்டில் நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் கிடாரகுளம் நெட்டூரைச் சேர்ந்த ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நெட்டூரைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக மணிகண்டனும் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

திங்கள் அன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மணிகண்டன் வீடு திரும்பியதை நோட்டமிட்ட மர்ம கும்பல் பழிக்குப்பழியாக அவரை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மணிகண்டனின் உறவினர்கள் கிடாரகுளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.மணிகண்டன் கொலை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கிடாரகுளம், நெட்டூர் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தென்காசியில் பழிக்குப்பழியாக இளைஞர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Tenkasi