முகப்பு /தென்காசி /

குற்றாலத்தில் செயற்கை அருவி? மதுரை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!

குற்றாலத்தில் செயற்கை அருவி? மதுரை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!

Private falls 

Private falls 

Courtallam falls | அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi | Madurai

அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து விரிவான அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன. சீசன் காலங்களில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.

இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழிப் பாதையை மாற்றுகின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது போல சட்ட விரோதமாக செயற்கை தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து அங்கே நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில், செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்டுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நோக்கங்களுக்காக செயற்கை அருவிகளை உருவாக்குவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு சட்டவிரோத தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால், அந்த குத்தகை ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு 3 மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

First published:

Tags: Courtallam, Local News, Madurai High Court