தென்காசி மாவட்டத்தில் உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தில் 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் பெட்ரோல் பைக்குகளை எப்படி எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தருகின்றனர் என பார்க்கலாம்.
யோசிக்க வைத்த பால் வியாபாரம் :
வடக்கு அழகு நாச்சியாபுரத்தை பொருத்தவரை பைக்குக்கு பெட்ரோல் போடவேண்டும் என்றால் சங்கரன்கோவில் செல்லும் வழியில் சென்றுதான் பெட்ரோல் போட முடியும். ஊருக்குள் பெட்ரோல் பங்க் கிடையாது. இந்த 4 அண்ணன், தம்பிங்களும் பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். தினமும் காலை, மாலை பால் விற்பனை செய்ய பைக்கை எடுத்து சென்று வந்தனர். இதனால் அவர்களுக்கு பெட்ரோல் செலவு அதிகமானது. இதனால் அவர்களுக்கு பெட்ரோல் பைக்குகள் எல்லாவற்றையும் எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. மேலும், மூத்த அண்ணன் ஏற்கனவே எலெக்ட்ரிகல் பற்றி கொஞ்சம் அறிந்தவர் என்பதால் அவர்களுக்கு இந்த தொழில் தொடங்க எளிதானது.
முதலில் அவர்களின் பைக்குகளை மட்டும் எலக்ட்ரிக் பைக்குகளாக மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. மேலும் பெட்ரோல் போடுவதற்கான செலவு சேமிக்கப்படுவதால் பணமும் மிச்சமானது. ஊர் மக்கள் மட்டும் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் இந்த தகவல் அறிந்து இதேபோல் தங்களுக்கும் செய்து தருமாறு அவர்களை கேட்டுள்ளனர். அதன்படி இந்த அண்ணன், தம்பிகளும் அவர்களுக்கு பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தருகின்றனர்.
சைக்கிளை கூட மாத்துறாங்க :
மேலும் இவர்கள் 20 ஆண்டுகள் பழமையான எம்ஐடி பைக்கை கூட எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளனர். பொதுவாக ஸ்கூட்டியில் தான் எலெக்ட்ரிக் பைக் தற்போது ட்ரெண்டாக உள்ளது. ஆனால் இவர்கள் டிவிஎஸ் 50, எம்ஐடி போன்ற பழைய வாகனங்களில் கூட எலெக்ட்ரிக் பைக்காக மாற்றித்தருகின்றனர். இந்த பைக்குகள் எல்லாம் தயாரித்து முதலில் அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காக தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சைக்கிளை கூட பேட்டரிகள் பொருத்தி எலெக்ட்ரிக் சைக்கிளாக பயன்படுத்தி வருகின்றனர்.
எந்த பைக்கா இருந்தாலும் அசால்ட்டு :
இவர்களிடம் புதிதாக யாரேனும் எலெக்ட்ரிக் பைக் தயார் செய்து கேட்டால் உடனே பழைய இரும்பு கடையில் கிடைக்கும் எக்ஸ்எல் (xl) பைக்கை வாங்கி வந்து அதில் வெல்டிங், வயரிங் மற்றும் பேட்டரி பொருத்தி எல்லாமும் இவர்களே செய்கின்றனர். மேலும் எம்ஐடி. எக்ஸெல் பைக்கில் மட்டுமல்லாமல் ஸ்கூட்டி, ஹீரோ ஹோண்டா, ராயல் என்ஃபீல்டு கூட எலெக்ட்ரிக் பைக்காக தங்களால் மாற்ற முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வளவு வேகம் போகும்?
இவர்கள் செய்யும் அனைத்து பைக்குகளையும் 42 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது போல் தான் தயாரிக்கின்றனர். 42 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பைக்குகளுக்கு நம்பர் பிளேட் தேவை இல்லை. அது மட்டுமல்லாமல் சைக்கிள், பைக் தாண்டி வீட்டுக்கான இன்வெர்ட்டர் மற்றும் ஆட்டோக்களுக்கும் பேட்டரி தயார் செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் பெட்ரோல் பைக்கை தயார் செய்து கொடுப்பதற்கு அதிக லாபம் இல்லாமல் அந்த பொருளுக்கு உண்டான பணத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு தயார் செய்து கொடுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi