ஹோம் /தென்காசி /

குழந்தைகளை ஆச்சரியப்படுத்தும் டைனோசர் உலகம்..! சங்கரன்கோவிலில் ஏராளமானோர் கண்டுகளிப்பு..

குழந்தைகளை ஆச்சரியப்படுத்தும் டைனோசர் உலகம்..! சங்கரன்கோவிலில் ஏராளமானோர் கண்டுகளிப்பு..

X
குழந்தைகளை

குழந்தைகளை ஆச்சரியப்படுத்தும் டைனோசர் உலகம்

Sankarankoil Exhibition : சங்கரன்கோவில் நடைபெற்ற பொருட்காட்சியை சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசித்தனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை மெயின் ரோடு நகராட்சி காலனி அருகில் காணும் பொங்கலையொட்டி டைனோசர் உலகம் என்ற பெயரில் பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ஸ்னோ வேர்ல்ட் மற்றும் ராட்டினங்கள் என பலவிதமான கேளிக்கைகளை கண்டு ரசிக்க பொதுமக்கள் அலைகடல் என திரண்டு வந்திருந்தனர். பொருட்காட்சிக்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் வீதம் நுழைவுச்சீட்டு வசூல் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அதை வைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் இலவசமாக உள்ளே நுழையலாம்.

உள்ளே நுழைந்த உடனே வண்ண வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட டைனோசர்கள் வரிசையாக சத்தமிட்டபடி நின்றது. மேலும் சத்தத்தோடு அசைந்ததும் பார்ப்பதற்கு தத்ரூபமாக இருந்தது. இதனை குழந்தைகள் பெருமளவில் பார்த்து ரசித்தனர். டைனோசர்கள் முன்பு நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். சோழர் காலத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் பழைய காலத்து நாணயங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பொருட்காட்சியில் ராட்டினத்திற்கு செல்லும் வழி முழுக்க குழந்தைகளை கவரும் விதமான கடைகள் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. இந்த கடைகளில் விற்கப்பட்ட நைட்ரஜன் பிஸ்கட் பலரையும் கவர்ந்தது. ஒரு நைட்ரஜன் பிஸ்கட் ரூ.30 வீதம் வசூல் செய்கின்றனர். பிஸ்கட்டை நைட்ரஜன் ஊற்றி புகை வருவது போல வந்தவுடன் வாயுக்குள் போட்டு சாப்பிட தொடங்கலாம். வாய் வழியாக புகை வந்து கொண்டே சாப்பிடும் பிஸ்கட்டை பலரும் விரும்பி உண்டனர். மேலும் திருவிழா என்றாலே பெண்களை கவரும் விதமான ஜிமிக்கி கம்மல், நெக்லஸ்களின குவித்து வைக்கப்பட்டிருந்த கடைகளில் பெண்கள் அலைமோதிக்கொண்டு பொருட்களை வாங்கி குவித்தனர்.

அதேபோல் 100 ரூபாய்க்கு வளையல்கள் விற்கப்பட்டன. இதனை வாங்குவதில் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். மேலும் ஊட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட சீரகம், கிராம்பு, மிளகு போன்ற பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இதில் மல்லி, வடகம், இஞ்சி வடகம் என வித்தியாசமான வடகங்களும் விற்கப்பட்டன. மேலும் அங்கு 90ஸ் கிட்ஸை கவரும் விதமாக புளிப்பு மிட்டாய்கள், ஆரஞ்சு மிட்டாய்கள், ஜல்லிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், சிறிய அரிசியில் நம் பெயரை எழுதி கொடுக்கும் ஸ்டால்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தது. நேர்த்தியாக ஒரு அரிசியில் நம்முடைய முழு பெயரையும் எழுதி ஒரு சிறிய பாட்டிலுக்குள் போட்டு தருவார்கள். அதில் நீர் நிரப்பி இருப்பதால் அது பார்ப்பதற்கு அழகாகவும், மக்களை கவரும் விதமாகவும் இருந்தது. மேலும் 100 ரூபாய்க்கு பெண்களுக்கான பர்ஸ்களும், 150 ரூபாய்க்கு செருப்புகளும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விற்கப்பட்டன.

குறைந்த ரூபாயில் அதிக மாடல்களை கொண்ட செருப்புகளை வாங்குவதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் இங்கு மீன் வளர்ப்பதற்கு கண்ணாடி தொட்டிகள் 100 ரூபாய்க்கும், மீன்களுக்கான உணவு 40 ரூபாய்க்கும் அதேபோல் மீன் தொட்டியில் அழகுக்காக வைக்கப்படும் செடிகள் 40 ரூபாய்க்கும், மீன் குஞ்சுகள் வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதனை வாங்குவதில் சிறு குழந்தைகள் மிகவும் ஆர்வம் காட்டி வந்தனர்.

மேலும் பொருட்காட்சியில் ஸ்நோ வேர்ல்ட், மேஜிக் வேர்ல்ட், 3டி, பேய் வீடு போன்ற குடில்கள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஷோவிற்கு ரூ.40-லிருந்து 50 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. வண்ண விளக்குகள் ஒளியில் பாடலுக்கு ஏற்றவாறு குழந்தைகள் நடனமாடினர். இந்த பொருட்காட்சியில் பல ராட்டினங்கள் இருந்தன. குழந்தைகளுக்கான கார் ராட்டினங்கள், பெரியவர்களுக்கான ஜெயிண்ட் வீல், கொலம்பஸ் போன்ற ராட்டினங்கள் என கூட்டம் கலை கட்டியபடி இருந்தது. பொருள்காட்சி என்றாலே ஒருபுறம் ராட்டினமும் மறுபுறம் அதற்கு அங்கு போடப்பட்டிருக்கும் கடைகள். அந்த கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவர்.

பஞ்சு மிட்டாய், ஐஸ் கோலா, ஸ்பிரிங் பொட்டேட்டோ, பானி பூரி, காலிபிளவர் மற்றும் பொருட்காட்சிக்கு பெயர் போன டெல்லி அப்பளம் போன்ற பல உணவுப் பொருட்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. டெல்லி அப்பளம் 40 ரூபாய்க்கும், ஐஸ் கோலா 40 ரூபாய்க்கும், ஸ்பிரிங் பொட்டேட்டோ 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதை வாங்கி சாப்பிடுவதற்கு மக்கள் குவிந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சங்கரன்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் மக்கள் இங்கு இன்னும் செல்லவில்லை என்றால் ஜனவரி 23ம் தேதிக்குள் சென்று விட்டு வாருங்கள். இந்த பொருள் காட்சி காலை 10 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரைக்கும் திறந்திருக்கும். குழந்தைகளோடு இதற்கு ஒரு விசிட் செய்து வாருங்கள்.

முகவரி : காவேரி நகர், நகராட்சி காலனி, கழுகுமலை சாலை சங்கரன்கோவில்.

First published:

Tags: Local News, Tenkasi