தென்காசி மாவட்டம் மலை அடி குறிச்சியின் அருகில் அமைந்திருக்கும் கோயில் தான் நாதகிரி முருகன் திருக்கோயில். திருமலை கோயில் போல் மலைமீது ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது இந்த நாதகிரி முருகன் கோயில்.
சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள தென்னை மரங்கள், வயல்கள் என கோயிலின் மேல் இருந்து பார்ப்பதற்கே பசுமையாக கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. மேலே அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்கு செல்வதற்கு சுமார் ஒரு 300 படிகள் ஏற வேண்டும். தொடக்கத்தில் இருக்கும் படிகள் பாறைகளில் இருந்து செதுக்கப்பட்டதாக இருக்கும். மேலே செல்வதற்காக கற்களை கொண்டு புதிதாக படிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
செல்லும் பாதையில் ஒருபுறம் பாறையும் மறுபுறம் வயல்வெளிகளும் என பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்திருக்கும். முதலில் வலம்புரி விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கும். விநாயகரை வணங்கி விட்டு இன்னும் சில படிகளை ஏறினால் முருகன் சன்னதியை அடையலாம். கார்த்திகை மற்றும் திருக்கார்த்திகையின் பொழுது தான் இந்த கோயில் வெகு விமர்சையாக இருக்கும். மற்ற நேரங்களில் கோயில் வெறிச்சோடி காணப்படும்.
மலைக்கு நடுவே பாறைகளின் இடுக்கில் வளர்ந்திருக்கும் பிரம்மாண்டமான ஆல மரத்தின் வேர்கள் காண்போரை பிரமிக்க வைக்கும் அளவில் அமைந்திருக்கிறது. மேலும் இரண்டு ஆல மரங்களை இணைக்கும் விதமாக அமைந்திருக்கும் கிளையை பார்ப்பதே அரிது. ஆனால் இங்கு ஒரு ஆலமரத்தில் இருக்கும் விழுது மற்றொரு ஆலமரத்தை இணைக்கும் வகையில் அமைந்திருப்பது பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கிறது.
மேலும் கிணற்றுக்குள்ளிருந்து வளரும் மரத்தையும் பார்ப்பதற்கு பிரம்மிப்பாகவே இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் மலை மீது இந்த இடத்தில் விளக்குகள் ஏற்றப்படும்.
மேலும் இந்த கோயிலை வழிபாடு செய்தால் திருமணம், குழந்தை பேரு, நோயற்ற வாழ்வு கிடைக்கும் திருத்தலமாக இந்த நாதகிரி முருகன் திருத்தலம் விளங்குகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதத்தில் விளக்கு போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
இந்த கோயிலில் 150 வருடத்திற்கு முன்பு தொடர்ந்து விளக்கு போட்டு வந்தவருக்கு வெள்ளி நாணயம் பரிசாக கிடைத்தது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் இரவு 10 மணி அளவில் இங்கு வாழ்ந்த சித்தர்கள் வந்து பூஜை செய்து செல்வார்கள் என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் கோயில்களில் மனநிம்மதியை தேடி வருபவர்களுக்கு நிச்சயம் இந்த நாதகிரி திருக்கோயில் ஒரு சொர்க்கமாக இருக்கும்.
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi