கலிங்கப்பட்டி அருகே அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் பெரியகருப்பன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டுறவு சங்கம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய துரை வைகோ, “20 ஆண்டுகளுக்கு முன்பு சில காரணங்களால் கலைக்கப்பட்ட அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்படும் இந்நாள் இப்பகுதி மக்களுக்கு ஒரு பொன்னாளாகும். இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அன்றைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினேன். அமைச்சர் அதிகாரிகளிடம் விவாதித்து விட்டு,கூட்டுறவு சங்கம் மீண்டும் இயக்கப்படுவது சிரமம்தான். ஆனாலும் நிறைவேற்றுவோம். மீண்டும் கரிசல்குளம் சங்கம் இயக்கப்படும். நீங்கள் மன நிம்மதியுடன் செல்லுங்கள் என்று கூற, மன மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினேன். அதன் பின்னர் பல முறை அமைச்சரிடம் நினைவு கூர்ந்தேன். அமைச்சரும் நடவடிக்கை எடுத்தார்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “அதன்பிறகு அமைச்சர் பெரியகருப்பன் புதிய கூட்டுறவுத் துறை அமைச்சரானார். அவர் கூட்டுறவு சங்கம் விரைவில் திறக்கப்படும். கவலை வேண்டாம்' என்று கூறினார். இன்று அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்கள்” என்றார்.
மேலும், “நான்கு கிராம மக்களிடம் உறுதி அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது. எனது குறுகிய கால அரசியல் பொதுவாழ்வுப் பயணத்தில் மக்களிடம் தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமையோடு இன்று உங்கள் முன்னால் நிற்பதை ஒரு சாதனையாகவே உணர்கின்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியலில் அடியெடுத்து வைத்த பொழுது, ஆதாயமில்லா மக்கள் பணி, சமரசமில்லா மக்கள் நலன், அதுவே என் பொது வாழ்வின் குறிக்கோள் என்று குறிப்பிட்டேன். அந்த வகையில் நான் உங்களுக்கு என்னால் இயன்ற வகையில் சாதி, மதம், அரசியல் வேறுபாடுகள் கடந்து உங்களுக்குப் பயன்படும் வகையில் பணியாற்றி வருகிறேன்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai Vaiko