ஹோம் /தென்காசி /

தென்காசி விளையாட்டு வீரர்களுக்கு அற்புத வாய்ப்பு.. வீரர்களே போட்டிகளில் திறமையை நிரூபிக்க தயார் ஆகுங்க..

தென்காசி விளையாட்டு வீரர்களுக்கு அற்புத வாய்ப்பு.. வீரர்களே போட்டிகளில் திறமையை நிரூபிக்க தயார் ஆகுங்க..

X
தென்காசி

தென்காசி

Cm Trophy | தென்காசி மாவட்டம் முதல் முறையாக முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதலமைச்சர் விளையாட்டு கோப்பை முதலில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட பின்பு அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில வாரியாக விளையாட தயாராவார்கள். 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதலமைச்சர் விளையாட்டு கோப்பை முதலில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட பின்பு அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில வாரியாக விளையாட தயாராவார்கள். ஜனவரி 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான ஆன்லைன் பதிவு முடிவடைகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கான பிரிவு கிரிக்கெட்டையும் சேர்த்துள்ளனர்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின்போது, "ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய 2 பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது" என அறிவித்தார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வயதுப் பிரிவினருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கியத்துவம் மற்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்திடஅனுமதியளித்து பார்வை 2-ல் கண்டவாறு ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23 (Tamil Nadu Chief Minister's Trophy Games 2022-23) என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட / மண்டல அளவில் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதையும் படிங்க : மேட்டுபாளையம் அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் விடிய விடிய நடத்தப்படும் தெருகூத்து

1. பொது பிரிவில் 15லிருந்து 35 வயது வரம்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கபடி, தடகளம், சிலம்பம், இறகு பந்து மற்றும் வாலிபால் உள்ளது.

2. பள்ளி பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் விளையாடலாம். இதில் 12ல் இருந்து 19 வயது வரம்பு உடையவர்கள் விளையாடலாம். கபடி, இறகு பந்து, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, நீச்சல், ஹாக்கி, வாலிபால் மற்றும் மேஜை பந்தும் நடைபெறுகிறது.

3. கல்லூரி மாணவ மாணவிகள் 17 முதல் 25 வயது வரை கலந்து கொள்ளலாம். இதில் கபடி, சிலம்பம், தடகளம், மேஜை பந்து, இறகு பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் மற்றும் நீச்சல் போட்டிகள் உள்ளது.

4. முதலமைச்சர் உலக கோப்பையில் பங்கேற்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப் போட்டி, இறகு பந்து, பார்வை குறைபாடு உடையவர்களுக்கான ஓட்ட போட்டி, மனவளர்ச்சி குன்றியோருக்கான ஓட்டப் போட்டி, செவிதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப் போட்டி, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டி என மாற்றுத்திறனாளிகளின் திறனுக்கு ஏற்ப போட்டிகளை பிரித்து வைத்துள்ளனர்.

5. அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில் வரம்பு கிடையாது. இது கபடி, இறகுப்பந்து, செஸ், மற்றும் வாலிபால் விளையாட்டுகள் உள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (www.sdat.tn.gov.in) வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்திட வேண்டும். இதற்கான தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.

பரிசுகள் மற்றும் பயன்கள் :

1) மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் அதிக அளவில் பதக்கம் பெறக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் "சிறந்த பயிற்சியாளர்" மற்றும் "சிறந்த உடற்கல்வி ஆசிரியர் / இயக்குநர்" ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

2) ஒவ்வொரு மாவட்டத்திலும் 588 நபர்களுக்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் 40 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. என மாநிலம் முழுவதிலும் 71,592 பரிசுகள்.

3) இப்போட்டிகளில் பெறப்படும் சான்தழ்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெற இயலும்.

4) போட்டியில் திறமையானவர்கள் கண்டறிவதற்கான (TalentHunt) நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவ்வாறு கண்டறியப்படும் திறமையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை SDAT விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.

5) இப்போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மற்றும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், "விளையாடு இந்தியா" (கேலோ இந்தியா) போட்டிகள், அகில இந்திய அளவிலான குடிமைப் பணியாளர்கள் போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுவர்.

மேலும் மாவட்ட அளவிலான நடக்கும் விளையாட்டு போட்டிகளில் தனிநபர் பிரிவில் விளையாடி வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயாகவும் இரண்டாம் பரிசாக 2000 ரூபாயாகவும் மூன்றாவது பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும் இரட்டையர் போட்டிகளுக்கு முதல் பரிசாக 6000 ரூபாயாகவும் இரண்டாவது பரிசாக 4000 ரூபாயாகவும் மூன்றாவது பரிசாக 2000 ரூபாயாகவும் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் கோப்பையில் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 36 ஆயிரத்திலிருந்து 54 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக 24 ஆயிரத்திலிருந்து 36 ஆயிரம் ரூபாயாகவும் மற்றும் மூன்றாவது பரிசிற்கு 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதலமைச்சர் கோப்பையில் ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். மேலும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் முதலமைச்சர் கோப்பை போட்டிக்காக தற்போது வரை சுமார் 1000 நபர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும் அதிக நபர்கள் கலந்து கொண்டால் இதில் அவர்களும் பயன்பெறுவார்கள் என்றும் தென்காசி மாவட்ட அலுவலர் விணு தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Sports, Tenkasi