தென்காசியில் கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம் பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் குறைந்தது. 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன் பெறலாம்.
01.01.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும். குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 இலட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் இருக்க வேண்டும்.
பயனாளர் தம் பங்காக, பொதுப்பிரிவு எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம், மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்டத் தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற www.msme.online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்று, சாதிச் சான்று, விலைப்புள்ளி மற்றும் திட்ட அறிக்கை ஆகியவை ஆகும்.
எனவே, கொரோனா பெருந்த தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, தகுதியும் ஆர்வமும் கொண்டோர் தம் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேற்காணும் திட்டத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கங்களுக்கு 8939273253 மற்றும் 04633-212347 என்ற தொலைபேசி எண்களிலும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், குத்துக்கல்வலசை, தென்காசி மாவட்டம் என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi