முகப்பு /தென்காசி /

Tenkasi | 18 மணி நேரம் வேலை செய்கிறோம்.. குறைந்த ஊதியமே கிடைக்கிறது- பெண்கள் வேதனை

Tenkasi | 18 மணி நேரம் வேலை செய்கிறோம்.. குறைந்த ஊதியமே கிடைக்கிறது- பெண்கள் வேதனை

X
பீடி

பீடி சுற்றும் பெண்கள்

Tenkasi | தினமும் 18 மணி நேரம் வரை வேலை செய்தாலும் குறைந்த அளவே ஊதியம் கிடைக்கிறது என்று பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவிக்கின்றனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெண்களின் வாழ்வாதார தொழிலாக பீடி சுற்றும் தொழில் உள்ளது. கிராமம், நகரம் என்கிற வேறுபாடு இல்லாமல் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய இந்த தொழில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவுரை சேர்ந்த பெண்களும் பீடி சுற்றும் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டு இருக்கிறார்கள். பீடி சுற்றுவதற்கு தேவையான இலை, புகையிலை போன்றவற்றை பீடி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கி விடுகின்றன. வீடுகள் தோறும் தொழிலாளர்கள் வீட்டிலிருந்தபடியே குடிசைத் தொழிலாக பீடியை சுற்றி அந்த நிறுவனங்களுக்கு கொடுத்து வருவாய் இட்டி வருகின்றனர். மூலப் பொருட்களான இலையையும் புகையிலையும் பெற்றுக் கொண்டு வீடு செல்லும் பெண்கள் அவற்றை கொண்டு பீடி சுற்றுகிறார்கள்.

பீடி சுற்றும் பெண்

அதற்கு ஊதியமாக கிடைக்கும் தொகையைக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கான கல்விச் செலவு உணவு உறைவிட தேவைகளை சமாளிக்கிறார்கள். பெண்கள் தினமும் 12 முதல் 18 மணி நேரம் பீடி சுற்றுகிறார்கள். 25 பீடிகள் கொண்ட கட்டுகள் 40 கொடுத்தால் 150 முதல் 200 ரூபாய் சம்பளமாக நாள் ஒன்றுக்கு கிடைக்கும். ஒரு மாதத்திற்கு சராசரியாக 6,000 ரூபாய் வரை கிடைக்கும்.

இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கோமதி பேசும்போது, ”நான் என்னுடைய 15 வயதிலிருந்து பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். 6,000 பீடிகளுக்கு வெறும் இருநூறு ரூபாய் மட்டுமே ஊதியம் கொடுப்பார்கள். 12,000 பீடிக்கு 300 ரூபாய் விதம் கூலியாக கொடுக்கின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறாயிரம் பீடிகளை மட்டுமே எங்களால் சுற்ற முடியும். அதற்கு காலையிலிருந்து நள்ளிரவு வரை ஆகிவிடும். இந்த ஊதியம் எங்களுக்கு போதியதாக இல்லை’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

பீடி சுற்றும் தொழிலாளி அமுதா கூறுகையில், ”நான் 22 வருடமாக பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். காலையில் வீட்டு வேலை முடித்த பின்பு ஒன்பது மணிக்கு பீடி சுற்றும் வேலையை ஆரம்பிப்பேன். நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை இதனை நான் செய்வேன். சுற்றி முடித்த பீடிகளை காய வைத்த பின்னர் தூங்கச் சென்று விடுவேன். அதிகாலையில் எந்திரிச்சு அதை கட்டுகளாக அடுக்கி கொண்டு கம்பெனியில் கொடுத்த பின்பே கைக்கு 150 ரூபாய் கிடைக்கும். அதிலும் தினமும் தவறாமல் எட்டு மணிக்கு சென்றால் மட்டுமே அடுத்த நாளைக்கு வேலைக்கு கிடைக்கும்.

நேரம் தவறி சென்று விட்டால் அதுவும் கிடையாது. எனக்கு 50 வயது தாண்டியதால் பென்சனுக்கு அப்ளை செய்து பெற்று வருகிறேன். பென்ஷன் பணமாக வெறும் 750 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது எங்களுக்கு போதிய தொகையாக இல்லை. இதை வைத்து எங்களை குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் மிக சிரமமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மூக்கு வாய் வழியாக பீடித்தூள், புகையிலை ஆகியவை செல்வதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய் ஏற்படுகிறது. ஆனால் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக அந்த நோய்கள் குறித்து வெளியில் கூட பேசாமல் இந்த தொழிலை செய்து வருகிறார்கள். அரசு இந்த தொழிலுக்கு மாற்றாக பெண்கள் பயனடையும் வகையில் வேறு பல தொழிற்சாலைகள் அமைத்து தர வேண்டும் என்று இங்குள்ள பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi