முன்பெல்லாம் அடையாளம் தெரியாத நம்பர்களில் இருந்து ஃபோன் செய்கின்ற ஆன்லைன் மோசடியாளர்கள், உங்கள் ஏடிஎம் பின் நம்பர் பிளாக் செய்யப்பட்டதாகக் கூறி உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று மோசடி செய்வது வழக்கமாக இருந்தது. அதேபோல யூபிஐ பரிவர்த்தனைகளிலும் கூட மோசடியான க்யூஆர் கோட் அனுப்பி வைத்து மோசடி செய்து வந்தனர். ஆனால், இவை குறித்து விழிப்புணர்வு அதிகரித்த நிலையில் மோசடியாளர்கள் புதுவித உத்தியை சமீப காலமாக நடத்தி வருகின்றனர். சர்வதேச எண்களில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக பொதுமக்களை இவர்கள் தொடர்பு கொள்கின்றனர்.
யூடியூபில் அதிக பார்வைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பணியை தங்கள் நிறுவனம் செய்து வருவதாகவும், தாங்கள் அனுப்பி வைக்கும் வீடியோக்களை வெறுமனே லைக் செய்தால் பணம் உங்களை தேடி வரும் என்றும் இவர்கள் அறிமுகம் செய்து கொள்வார்கள். குறிப்பாக இது பகுதி நேர வேலைவாய்ப்பு என்றும், வேலை சுலபமானது என்றும் கூறி வலை விரிக்கின்றனர். இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அடுத்தடுத்து சில யூடியூப் வீடியோ லிங்க்-களை அனுப்பி, அவற்றை லைக் செய்ததை ஸ்கிரீன்சாட் எடுத்து அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள்.
அதை மட்டும் செய்து விட்டால் போதும், அடுத்தடுத்த உத்திகளை கையாண்டு நம்மை மோசடி செய்து விடுவார்கள்.மக்களின் நம்பிக்கையை பெறும் நோக்கில், தொடக்கத்தில் அவர்களது வங்கிக் கணக்கிற்கு சிறு தொகையை அனுப்பி வைக்கவும் இவர்கள் தவறுவதில்லை. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை அடுத்த அந்தேரி பகுதியைச் சேர்ந்த நபரும் இதுபோல அண்மையில் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
நாளொன்றுக்கு 6 ஆயிரம் வருமானம் : யூடியூப் வீடியோக்களை லைக் செய்தால் நாளொன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையில் கிடைக்கும் என்று வாட்ஸ் அப் மூலமாக ஒரு பெண் தொடர்பு கொண்டுள்ளார். தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக இதைச் செய்வதாகவும், வீடியோக்களை லைக் செய்தால் உறுதியாக பணம் கிடைக்கும் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், மும்பை நபர் ஒருசில வீடியோக்களை லைக் செய்யத் தொடங்கினார். அவ்வாறு அவர் லைக் செய்த வீடியோக்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிறிய அளவிலான தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால், அந்த மோசடியாளரை இவர் முழுமையாக நம்பினார்.
இதற்கிடையே, டெலிகிராம் குரூப் ஒன்றில் இவர் சேர்க்கப்பட்டார். மேலும் யூடியூபில் வீடியோவை லைக் செய்வதற்கான பணம் முழுவதும் இனி மெய்நிகர் அக்கவுண்ட் (virtual) மூலமாக வரவு வைக்கப்படும் என்று இவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மெய்நிகர் அக்கவுண்டில் உள்ள பணத்தை பெறவும், பெரிய தொகை கொண்ட ப்ராஜக்டுகளை பெறவும் பணம் செலுத்துமாறு அந்த நபரை மோசடியாளர்கள் அறிவுறுத்தினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்தால் கிடைக்கக் கூடிய பணம் பாதியாக குறையும் என்றும் குறிப்பிட்டனர். இதனால் அடுத்தடுத்து பணம் அனுப்ப தொடங்கிய மும்பை நபர், ஒரு கட்டத்தில் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்துள்ளார். மொத்தம் அவரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Scam, Technology, Youtube