முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / நீங்கள் வாங்கும் பால் சுத்தமானாதா ? இனி வெறும் 30 செகண்ட்ல கண்டுபிடிச்சடலாம்...

நீங்கள் வாங்கும் பால் சுத்தமானாதா ? இனி வெறும் 30 செகண்ட்ல கண்டுபிடிச்சடலாம்...

பால்

பால்

பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? இல்லை சுத்தமானதா? என்பதை வெறும் 30 நொடிகளில் கண்டறியும் எளிய கருவியை சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு காலத்தில் உணவே மருந்து, இன்று மருந்தே உணவாகிப் போனது. அந்த அளவிற்கு நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் கலப்படம் மற்றும் தரமில்லாத தன்மை. எனவே தரமில்லாத இந்த உணவுகளை உட்கொள்ளும் நாம் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும் தரமற்றது என்பது தெரிந்தும் வேறு வழியில்லாமல், இந்த உணவுகளைத் தான் வாங்கி உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிலும் உலகிலேயே அதிகமாகக் கலப்படம் செய்யப்படும் உணவுப் பொருள் பால்தான். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என அதிகமானோர் பாலை அருந்துகிறார்கள். இதனால் அதிநுகர்வுப் பொருளாக இருக்கிறது பால். அதிக தேவை உள்ளதால் கலப்படமும் செய்யப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கலப்பட பாலால் சிறுநீரகப் பிரச்னை, இரப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகின்றன. இந்த நிலையை மாற்ற ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பால் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை வெறும் 30 நொடிகளில் நாமே கண்டுபிடித்து விடலாம். அப்படிப்பட்ட கையடக்க கருவி ஒன்றை மெட்ராஸ் ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த கருவியை மக்கள் தங்களது வீடுகளிலேயே எளிய முறையில் பயன்படுத்தி பாலின் தரத்தை அறிந்து கொள்ளலாம். 3டி-மைக்ரோ ஃபுளூயிடிக் டிவைஸ் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் இந்த கருவிக்கு. கலோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இந்தக் கருவியில் ஊற்றப்படும் பாலில் கலந்திருக்கும் வேதிப் பொருட்களை இந்தக் கருவி கண்டுபிடித்துக் காட்டிக் கொடுத்துவிடும். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 3டி காகித அடிப்படையிலான இந்த சாதனத்தின் மூலம் வெறும் 30 விநாடிகளுக்குள் கலப்படத்தைக் கண்டறியலாம் என்று கூறப்படுகிறது.

பாலில் கலப்படம் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் யூரியா, சோப்பு, ஸ்டார்ச் மற்றும் ஹைட்ரஜன் கார்பனேட் ஆகிய வேதிப் பொருள்கள் எந்தெந்த அளவில் கலக்கப்பட்டுள்ளது என்பதை இந்த கருவி மிக எளிமையாகக் கண்டுபிடித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி மிகவும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த கருவியின் மூலம் குடிநீர், பழச்சாறு, பால் கலந்த பானம் போன்றவற்றிலும் கலப்படத்தைக் கண்டறியலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற அசத்தலான கண்டுபிடிப்புகள் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

Also Read : நிலவில் 4ஜி நெட்வொர்க்..கலக்கக் காத்திருக்கும் நோக்கியா நிறுவனம்

ஐ.ஐ.டி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை இணைப் பேராசிரியரான டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்கள் சுபாஷிஸ் பட்டரி, டாக்டர் பிரியங்கன் தத்தா ஆகியோரும் இணைந்து இந்த கருவியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்தக் கருவி பொதுமக்கள் பயன்படுத்தும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: IIT Madras, Milk