ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போன்கள் தயாரிக்கும் பணியில் இந்திய நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. இந்த வாய்ப்பு டாடாவுக்கு எப்படி கிடைத்தது என்பதை இப்போது பார்க்கலாம்.
தனது ஐபோன்கள் அசெம்பிளிங் செய்யும் பணியை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நான்கு நிறுவனங்கள் வழியாக செய்து வருகிறது. Foxconn Technology Group, Pegatron Corp மற்றும் Luxshare Precision Industry Corporation என இந்த மூன்று நிறுவனங்களும் ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன. இப்போது டாடா குழுமம் இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க உள்ளது. டாடா ஆப்பிளின் நான்காவது ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கும். டாடாவைத் தவிர மற்ற மூன்றுமே தைவான் நாட்டு நிறுவனங்கள். முன்னதாக தைவான் நாட்டைச் சேர்ந்த வினஸ்ட்ரான் நிறுவனமும் இந்தியாவில் ஐபோன்களை தயாரித்து வந்தது. அந்த நிறுவனத்தை தான் டாடா வாங்கியுள்ளது.
ஆப்பிளின் போன்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஏற்கனவே டாடா முயற்சி செய்து வந்தது. இது தொடர்பான ஆரம்ப செய்திகள் 2020 ஆம் ஆண்டு அக்டோபரிலேயே வந்தன. ஆப்பிளின் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஆலையில் டாடா நிறுவனம் 5,000 கோடி முதலீடு செய்வதாக செய்திகள் வெளிவந்தன. இதற்காக உருவாக்கப்பட்ட டாடா குழுமத்தின் புதிய நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், ஓசூரில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அன்றிலிருந்து ஆப்பிளின் தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு டாடா முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த விஸ்ட்ரான் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தியது. தைவானிய நிறுவனமான விஸ்ட்ரான் கார்ப் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதற்காக 2006 இல் இந்திய துணை பிராண்டான விஸ்ட்ரான் இந்தியாவை அறிமுகப்படுத்தியது. இதன் தலைமையகம் பெங்களூரில் உருவாக்கப்பட்டது.
டிசம்பர் 2020 இல், விஸ்ட்ரான் இந்தியாவின் நர்சாபுரா ஐபோன் தயாரிப்பு ஆலையின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்படுதாகவும், உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஊழியர்கள் நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கர்நாடக அரசு விஸ்ட்ரான் இந்தியாவின் தொழிலாளர் நடைமுறைகள் குறித்து விசாரணையை நடத்தியது. சரியான நேரத்தில் சம்பளம் வழங்காதது, ஊழியர்களுக்கு சரியான பணிச்சூழலை வழங்காதது போன்ற பல விதிகளை அந்நிறுவனம் மீறியதை அரசு கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு விஸ்ட்ரானை மாநில உற்பத்தியாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆப்பிள் விஸ்ட்ரானில் தனது விசாரணையை தொடங்கியது.
பிப்ரவரி 2021 இல், விஸ்ட்ரான் இந்தியாவில் உற்பத்தியை மீண்டும் தொடங்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. ஆனாலும் விசாரணை நடைமுறைகள் தொடர்ந்தன . முன்னதாக 2019 ஆம் ஆண்டில், கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், விஸ்ட்ரான் நிறுவனம் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுவதாக குற்றம் சாட்டியது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய விசாரணையில், அந்நிறுவனம் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நிலத்தில் கொட்டுவதும், இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதும் தெரியவந்தது. இதுவும் அந்நிறுவனத்திற்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியது.
இதனால் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை தொடர விஸ்ட்ரான் நிறுவனம் விரும்பவில்லை. இந்நிலையில் தான் விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா பேச்சுவார்த்தை நடத்தி அந்நிறுவனத்தை கையகப்படுத்தியது. டாடா நிறுவனம் கையகப்படுத்தியுள்ள ஆலையில் எட்டு ஐபோன் அசெம்பிளி லைன்கள் மற்றும் சுமார் 10,000 பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள டாடா நிறுவனம் கையகப்படுத்திய தொழிற்சாலை 2.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தான் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை டாடா தயாரிக்க உள்ளது.
Also Read : புத்தம் புதிய அப்டேட்களுடன் அசுர வளர்ச்சியில் ChatGPT - மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..
இங்கு மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டு ஆக வேண்டும். ஆப்பிள் தனது உற்பத்தி விநியோகச் சங்கிலியை சீனாவிலிருந்து மாற்ற நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆப்பிள் அதன் விநியோக ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதில் கவனம் செலுத்தியும் வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஆப்பிள் நிறுவனத்திற்கு சிறந்த ஹோஸ்ட் என்பது நிரூபணமாகியுள்ளது.
சமீபத்தில், ஆப்பிள் தனது முதல் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களை மும்பை மற்றும் டெல்லியில் அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் சந்தை மற்றும் அதன் திறன் மேல் ஆப்பிள் நிறுவனம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்றே சொல்லலாம். அதோடு புதிய ஐபோன் சீரிஸ் போன்கள் முதலில் வெளியிடப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. உலகளாவிய ஆர்டர்களில் சுமார் ஐந்து சதவீதம் டாடா நிறுவனத்திற்கு தொடக்கத்தில் வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple iphone, IPhone, TATA