ஆன்லைன் வர்த்தகம் என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதிலும் கொரோனா முடக்கத்திற்குப் பிறகு ஆன்லைன் வர்த்தகம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று ஆரம்பித்து அரிசி பருப்பு, மருந்து மாத்திரைகள் வரை அனைத்துமே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்தியாவில் மருந்து மாத்திரைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காகவே டாட்டா 1 எம்ஜி, நெட் மெட்ஸ், மெடிபடி, அப்போலோ போன்ற பல இணையதளங்கள் மற்றும் செயலிகள் செயல்பாட்டில் உள்ளன். இவற்றை இ-ஃபார்மசி என்கிறோம். சமீபகாலமாக இ-ஃபார்மசிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இ-பார்மசிகளை முறைப்படுத்தவும், விதிகளை மீறும் செயலிகளுக்கு தடை விதிக்கவும் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
டேட்டா பிரைவசி, முறைகேடுகள், நம்பகத்தன்மை இல்லாத மருந்துகளின் விற்பனை போன்ற குற்ற செயல்பாடுகளுக்காக இ-ஃபார்மசிக்களை தடை செய்யும் நடவடிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. புதிய மருந்துகள், மருத்துவத்திற்கான சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் மசோதா 2023-ன் திருத்தப்பட்ட வடிவத்தில் இந்த தடைக்கான ஆலோசனை குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை நெறிப்படுத்த அல்லது தடை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1940 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு இப்போது வரை செயல்பாட்டில் இருக்கும் மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் மாற்றி எழுதப்பட்டு இந்த புதிய திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சட்டத்தின் பழைய வடிவத்தில் இந்திய அரசின் ஒப்புதல் மற்றும் உரிமம் இருப்பவர்களை தவிர்த்து வேறு எந்த ஒரு தனிநபரும் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யவோ, பாதுகாத்து வைக்கவோ அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது திருத்தப்பட்ட புதிய சட்டத்தில், அனுமதி இருந்தால் இ-ஃபார்மசி நடத்தலாம் என்பது நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த திருத்தம் நிகழ்த்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக நோயாளிகள் பற்றிய விபரங்களையும், அவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சைகள் மற்றும் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பற்றிய விபரங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆன்லைன் இணையதளங்கள் மூலம் இயங்கும் இ-ஃபார்மசிக்களால் இந்த தகவல்கள் இன்டர்நெட்டில் பதிவாகின்றன.
மேலும், இ-ஃபார்மசிக்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் செயல்திறன் நம்பகமாக இருக்குமா என்ற கேள்விக்குறியும் பலருக்கு இருக்கிறது. இந்த காரணங்களுக்காகத்தான் மத்திய அரசு இ-ஃபார்மசிக்களை தடை செய்ய தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் மருந்து விற்பனையில் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் இருந்து டாட்டா 1mg, அமேசான், பிளிப்கார்ட், நெட் மெட்ஸ், மெடிபடி, ப்ராக்டோ மற்றும் அப்போலோ போன்ற இ-ஃபார்மசி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Medicine, Online medicine, Online purchase