வருமான வரித் துறை நடத்தும் ரெய்டு பற்றிய முழு விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க மத்திய அரசு தயாராக இல்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித் துறை நடத்திய ரெய்டுகளின் விவரங்கள் அப்போது கைப்பற்றபட்ட ரொக்கம் போன்ற தகவல்களைக் கேட்டு விரிவான கேள்வியை மக்களவையில் எழுப்பி இருந்தார். மத்திய அரசின் நிதி அமைச்சரை நோக்கி தொடுக்கப்பட்ட அந்தக் கேள்வியில் கேட்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
சென்ற மூன்று ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்ட / சந்தேகத்திற்கு உள்ளான வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித் துறையால் எந்தெந்த நிறுவனங்கள் / தனி நபர்கள் மீது ரெய்டுகள் நடத்தப்பட்டன; அதில் கைப்பற்றபட்ட கணக்கில் காட்டப்படாத பணம் எவ்வளவு, அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, வரி ஏய்ப்பு செய்தோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, வசூல் செய்யப்பட்ட கூடுதல் வரித்தொகை எவ்வளவு எனப் பல்வேறு தகவல்கள்களைத் தெரிவிக்கவும் என்று வினாவில் கேட்கப்பட்டது.
மக்களவையில் கடந்த 3ஆம் தேதி எழுப்பப்பட்ட இந்த வினாவுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், “வருமான வரிச் சட்டத்தில் ரெய்டு என்பது - இல்லை. ஆனால், வரி ஏய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ள வருன வரிச் சட்டம் அதிகாரம் தந்துள்ளது. அதுபோன்ற சோதனைக்குப் பின்னர் வரி கணக்கு மதிப்பீடு செய்யப்பட்டு உரிய வரி அல்லது கூடுதல் வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இதனை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு ஆணையர், மேல்முறையீட்டு ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யப்பட்டு இறுதி முடிவு வந்த பிறகுதான் எவ்வளவு வரி ஏய்ப்பு என்பது உறுதியாகும். பின்னர், தண்டனை வழங்கப்படும் போதும் இதே மேல்முறையீடு நடைமுறை உண்டு.
இதையும் வாசிக்க: சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது... திமுக உள்பட 14 கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!
மேலும், வருமான வரித் துறை பல்வேறு மாநிலங்களில் சந்தேகப்பட்டோர் மேல் சோதனை செய்வதால் மாநில வாரியாக, வரி ஏய்ப்புத் தொகை, கைப்பற்றப்பட்ட பணம் போன்ற விபரங்களைத் தர இயலாது.
2019-20 தொடங்கி 2022-23 ஜனவரி மாதம் வரை, சென்ற நான்கு ஆண்டுகளில் மொத்தம் 2841 குழுமங்கள் மீது வருமான வரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 4850 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வருமான வரிச் சட்டம் பிரிவு 138 ன்-படி தளிநபர் வருமான வரி தொடர்பான தகவல்கள் மூன்றாவது நபர்களுக்கு தெரியப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், கேள்வியில் கோரப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், தகவல்கள் வருமான வரித் துறையில் ஒரே இடத்தில் தொகுத்து வைக்கப்படுவதில்லை. இவ்வாறு தனது பதிலில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு, “இந்த பதில் வருமான வரித் துறை நடத்தும் ரெய்டு பற்றிய முழு விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. மேலும், வருமான வரித் துறை ரெய்டு செய்வதில்லை சோதனைதான் மேற்கொள்கிறது என்று அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஏராளமான அதிகாரிகள் எதிர்பாராமல் திடீர் சோதனையில் இறங்குவது ரெய்டு அல்ல என்று வாதிடுவது நகைப்புக்கு இடமளிக்கிறது.
இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தந்த இந்த பதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமின் ஒப்புதலோடு அளிக்கப்பட்டதா ? என்று தெரியவில்லை. மாநிலங்கள் வாரியான வருமான வரி சோதனைகளின் முழு விவரங்களை நிதி அமைச்சர் தரத் தயங்குவது பல்வேறு சந்தேகங்களை வலுப்படுத்துகிறது; தவிர இவை பாரபட்சமற்ற முறையில் நடைபெறுகிறது என்பதையும் உறுதிப்படுத்தத் தவறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.