முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேயர்... இருமுறை எம்.பி... மு.க.ஸ்டாலின் உயிரை காத்த சிட்டிபாபு... யார் அவர்?

மேயர்... இருமுறை எம்.பி... மு.க.ஸ்டாலின் உயிரை காத்த சிட்டிபாபு... யார் அவர்?

சிட்டிபாபு

சிட்டிபாபு

சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியில் தீவிரமான பங்களிப்பு செய்த சிட்டிபாபுவின் செயல்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 1967 மக்களவைத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் நிற்கும் வாய்ப்பை அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் கொடுத்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று நான் உயிரோடு நின்று பேசுவதற்கு முழுக் காரணம் சிட்டிபாபு. மிசா சிறையில் இருந்தபோது என் மீது விழ இருந்த அடிகளை எல்லாம் அவர் வாங்கவில்லை என்றால் இன்று நான் இல்லை. அந்த நன்றி உணர்வோடுதான் சென்னை வில்லிவாக்கத்தையும் கொளத்தூரையும் இணைக்கும் மேம்பாலத்துக்கு மேயர் சிட்டிபாபுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று உணர்ச்சிகரமாகப் பேசியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

யார் இந்த சிட்டிபாபு?

ஐம்பதுகளின் மத்தியில் திமுக தொண்டராகத் தீவிரமாகப் பணியாற்றி வந்தவர் சிட்டிபாபு. தந்தையார் பெயர் சொக்கலிங்கம். அரசியல் காற்றை அதிகம் சுவாசித்து, திமுக தொண்டராகத் துடிதுடிப்புடன் பணியாற்றிவந்த சிட்டிபாபு 1958ல் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு 1965 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை மாநகராட்சியின் ஆரம்பகட்ட வளர்ச்சியில் தீவிரமான பங்களிப்பு செய்த சிட்டிபாபுவின் செயல்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 1967 மக்களவைத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் நிற்கும் வாய்ப்பை அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் கொடுத்தனர். செங்கல்பட்டு தொகுதியில் தொடர்ச்சியாக இருமுறை வெற்றிபெற்றவர் சிட்டிபாபு.

திமுகவின் சென்னை முகங்களுள் ஒருவராக இருந்த சிட்டிபாபுவும் மு.க.ஸ்டாலினும் நெருக்கமாகப் பழகியவர்கள். அதன் காரணமாகவே சிட்டிபாபுவும் மு.க.ஸ்டாலினும் தனது நண்பருடன் இணைந்து அறிவுச்சுடர் மூவிஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். அந்த நிறுவனத்தின் சார்பில் மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து நம்பிக்கை நட்சத்திரம் என்ற படத்தைத் தயாரித்தனர்.

1975ல் எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்தி, தமிழ்நாட்டில் திமுக தலைவர்களையும் நிர்வாகிகளையும் தேடித்தேடிக் கைது செய்தார். அப்படி மிசா சட்டத்தின் கீழ் கைதானவர்களில் சிட்டிபாபுவும் ஒருவர். அதே மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது சிட்டிபாபு இருந்த அறையில்தான் மு.க.ஸ்டாலினும் அடைக்கப்பட்டார்.

அப்போது காவல்துறையினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு முரசொலி மாறன், கி.வீரமணி, சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் ஆளாகினர். சிறையில் அடைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் தாக்குதலுக்கு உள்ளானார். பூட்ஸ் காலால் மிதிக்கப்பட்டார். கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போது காவலர்களின் தாக்குதலில் இருந்து மு.க.ஸ்டாலினைக் காப்பாற்றுவதற்காக அந்த அடிகளை வலிந்து சென்று வாங்கிக்கொண்டவர் சிட்டிபாபு.

இதையும் படிக்க : டாக்டர் அம்பேத்கர் யாருக்கு எதிரானவர்?

சிறைக்குள் நடத்தப்பட்ட தாக்குதலால் சிட்டிபாபுவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தபிறகும்கூட சிட்டிபாபு குணமடையவில்லை. அற்ப ஆயுளில் மரணத்தைத் தழுவினார் சிட்டிபாபு. மிசாவில் கைதாகி கட்சிக்காகத் தனது உயிரையே தியாகம் செய்தவர் என்பதால் ‘தியாக மறவன் சிட்டிபாபு’ என்றே அவர் திமுகவினரால் அழைக்கப்பட்டார். மாநகராட்சி உறுப்பினர் பதவி முதல் மக்களவை உறுப்பினர் பதவி வரை சிட்டிபாபு வகித்திருந்தாலும் அவரது அடையாளம் மேயர் சிட்டிபாபுதான்.

மிசாவில் கைதாகி சிறையில் இருந்தபோது சிறைக்குள் நடந்த கொடுமைகளை எல்லாம் டைரியில் பதிவுசெய்திருந்தார் சிட்டிபாபு. மிசா சிறைவாசிகளுக்கு அப்போது எப்படிப்பட்ட உணவு வழங்கப்பட்டது என்பது தொடங்கி மிசா கைதிகள் எப்படி நடத்தப்பட்டனர் என்பது வரை எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி எழுதியிருப்பார். மிசா காலத்தின் கொடுமைகளைக் காட்சிப்படுத்திய அந்த ஆவணப் பதிவுகளுக்கு சிட்டிபாபு வைத்த பெயர், ஆயுள் கைதி அனுபவங்கள். பிறகு சிட்டிபாபு சிறை டைரி என்ற பெயரில் திமுக இளைஞரணி புத்தகமாக வெளியிட்டது.

top videos

    அந்த வகையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி வாழ்விலும் அரசியல் பயணத்திலும் சிட்டிபாபுவின் பங்களிப்பு முக்கியமானது. அந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே சிட்டிபாபுவின் பெயரை மேம்பாலத்துக்குச் சூட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    First published:

    Tags: CM MK Stalin