அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் சிலர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10 ஆம் தேதி காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது.
மேலும் ஆசிரமத்தில் இருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 16 பேர் வரை காணாமல் போனது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.இதையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, பதிவு செய்யாமல் இயங்கி வந்த ஆறு புனர்வாழ்வு இல்லங்களுக்கு மாநில மனநல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரங்கள் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் நேரில் சென்று ஆய்வு நடத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
சமூக நலத்துறை அதிகாரி, மனநல ஆலோசகர், காவல்துறையினர், மாற்று திறனாளிகள் நல அலுவலர் உட்பட மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.பதிவு செய்த, பதிவு செய்யப்படாத என அனைத்து இல்லங்களுக்கும் நேரில் சென்று இந்த குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளன. அந்த வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள், புனர்வாழ்வு இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் என நான்கு வகையிலான சுமார் 1000 இல்லங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.
சுகாதாரத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை என வெவ்வேறு துறைகளின் கீழ் இயங்கி வரும் இல்லங்கள், அதற்குரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட உள்ளன. இரண்டு படுக்கைகளுக்கு இடையில் 3 அடி இடைவெளி வேண்டும், போதிய காற்று வசதி, உணவு, குடிநீர், மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை விதிகளை பூர்த்தி செய்துள்ளதா என்றும் குழு ஆய்வு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Villupuram