முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை.. லட்சக்கணக்கில் சிக்கிய பணம்

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை.. லட்சக்கணக்கில் சிக்கிய பணம்

லஞ்ச ஒழிப்பு சோதனை

லஞ்ச ஒழிப்பு சோதனை

Tamilnadu Government Office Raid | தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று நடத்திய சோதனையில் கணக்கில் வராத 33 லட்சத்து 75 ஆயிரம் பணம் பறிமுதல்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் அரசு அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை,  போக்குவரத்துதுறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 12 துறைகளின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,53,000 பறிமுதல் செய்யப்பட்டது. ஒசூர் ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் கணக்கில் வராத 1,04,050 கைப்பற்றப்பட்டது.அதேபோல் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில்  ரூ. 2,09,000 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கில் வராத 15,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 லட்ச ரூபாய் பணம் சிக்கியது. பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இடைத்தரகர்கள் தப்பியோடினர். அங்கு கணக்கில் வராத 8,41,000 பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையை கண்ட ஊழியர்கள், கையில் வைத்திருந்த லஞ்ச பணத்தை அள்ளி வெளியே வீசினர். அவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி தென்னூர் மின்வாரியம் அலுவலகத்தில் கணக்கில் வராத பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறினர். நெல்லை இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், இணை சார் பதிவாளர் முத்து முருகன் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத 35,800 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அலுவலகம் அருகே இருக்கும் பத்திர எழுத்தர் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு இரண்டு பத்திர எழுத்தர்களிடம் இருந்து கணக்கில் வராத 27,100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read :ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

குன்னூர் சார்_பதிவாளர் அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 1,26,000 ரூபாய் கைப்பற்றப்பட்டள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர். கடலூரில் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையத்தில் உள்ள பங்கஜம் கன்ஸ்ட்ரக்சன், கோண்டூர் மற்றும் கான்வென்ட் ரோட்டில் உள்ள பங்கஜம் கன்ஸ்ட்ரக்சன் கிளை நிறுவனங்கள், பாரதி சாலையில் உள்ள ஆல்பா கன்ஸ்ட்ரக்சன் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. தனியார் கட்டுமான இடத்தில் நகர அமைப்பு அலுவலகத்திற்கு இணையான அலுவலகம் 15 ஊழியர்களைக் கொண்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்த காகிதத்தையும் கைப்பற்றினர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவைகள் தவிர தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதன் முழு விவரங்களையும் இன்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Directorate of Vigilance and Anti-Corruption, Tamilnadu