கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டனர். அப்போழுது பேசிய மு.க.ஸ்டாலின், ‘1924-ஆம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.
வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் எழுதினார்கள். வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால்தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகள் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டிலும் சுசீந்திரத்திலும், திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, மயிலாடுதுறையி கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்தான். எனவே சுயமரியாதை, சமூகநீதிப் போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். வெற்றிப் பெருமிதத்துடன் நான் இங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.
அந்த வகையில் 100 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டை மறக்காமல் எங்களை அழைத்துள்ளார் கேரள மாநிலத்தினுடைய முதல்வர் பினராயி விஜயன். வைக்கம் பொன் விழாவானது 1975-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தலைமையில் நடந்தது. 1985-ஆம் ஆண்டு பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. 3.11.1985 அன்று நடந்த விழாவில், அன்றைக்கு தமிழ்நாட்டினுடைய நிதி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனும் - கேரள வருவாய்த் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்பும் கலந்து கொண்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பின்னர் பேசிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், வைக்கம் நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், தமிழ்நாடும், கேரளாவும் ஒரே மாதிரியான போராட்டங்களை சந்தித்த மாநிலங்கள் எனக் கூறினார். வைக்கம் போராட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியுள்ளதாகவும் தமிழ்நாடு-கேரள மக்களின் ஒற்றுமை வரும் காலத்திலும் தொடரும் என்றும் பினராயி விஜயன் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Pinarayi vijayan