முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பா...? டி.டி.வி.தினகரன் விளக்கம்

ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பா...? டி.டி.வி.தினகரன் விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்திக்க வந்தால் நான் சந்திப்பேன் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘60 மாதங்களில் வரவேண்டிய எதிர்ப்பு திமுக ஆட்சியின் மீது இரண்டு ஆண்டுகளிலேயே வந்துள்ளது. தற்போது நடைபெறுவது மக்களுக்கு எதிரான ஆட்சி. ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றுதான் நான் பார்க்கிறேன்.

அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு நாம் அறிவுரை கூற முடியாது. மக்கள் தான் சரியான அறிவுரையை கொடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அப்போது மக்கள் முன்னேற்ற கழக நிலைபாடு தெரியும். வரும் நவம்பர் மற்றும் டிசம்பருக்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்.

ஓ.பன்னீர் செல்வம் மாநாடு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. மக்கள் தான் முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர். அதிமுக தற்போது தீயவர்களின் கையில் சிக்கி உள்ளது. அந்த பிடியிலிருந்து அதிமுக தொண்டர்களை மீட்டு திமுகவின் தீய ஆட்சியை விரட்டி மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நத்தையை விட குறைந்த வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர். கொடநாடு வழக்கில் பழனிச்சாமி, திமுகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார் என்ற சந்தேகம் அமைந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் விவகாரம் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு குடும்பத்தின் கீழ் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு சிக்கி இருப்பதாக திமுக அமைச்சர் ஒருவரை கூறியதாக செய்திகள் வருகின்றன. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. 12 மணி நேர வேலை சிந்தனை வந்ததே திமுகவின் ஹிட்லர் தனத்தை காட்டுகிறது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க திமுக ஆட்சி பழனிச்சாமி ஆட்சியை விட மிகவும் மோசமாக சென்று கொண்டுள்ளது.

ஆணவத்தின், அகங்காரத்தின் உச்சியில் திமுக இருந்து கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. நான் உயிரோடு இருக்கும் வரை அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன்.

அதிமுகவின் பை லாவையே மாற்றிவிட்டு துரோகம் செய்துவிட்டு இன்று பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கியுள்ளார். கூவத்தூரில் யாரையும் நாங்கள் விலைக்கு வாங்கவில்லை.

எம்எல்ஏக்கலெல்லாம் ஒன்று கூடி நாங்கள் ஒன்றாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்தும் இடமாக கூவத்தூர் இருந்தது. தவிர அங்கே யாரையும் விலை கொடுத்து நாங்கள் வாங்கவில்லை. இது பொய் பிரச்சாரம். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து விட்டு பதவி போன பின்பு அதனை பயன்படுத்தி செலவு செய்து கட்சியை அபகரித்து உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

விமர்சனங்களை பற்றி இம்மியளவும் கவலைப்படுவதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு கண்காணிப்பாளராக உதவியாக இருக்கலாமே தவிர தமிழ்நாடு, திராவிட நாடு என்று பேசக் கூடாது. ஆளுநர் கூறியது திமுக கூறிவரும் திராவிட மாடல் என்பதை குறிக்கும் என்று நான் கருதுகிறேன்.

நாம் பிறப்பால் திராவிடர்கள், இந்தியர்கள். திமுக, திராவிடர்களை ஏமாற்றி திராவிட மாடல் என்று கூறி வருகிறது. திமுக திராவிட மாடல் என்று கூறக்கூடாது. கருணாநிதி மாடல் அல்லது ஸ்டாலின் மாடல் என்று கூறலாம்.

கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து படத்தை பார்த்துவிட்டு தான் எந்த விதமான பதிலும் கூற முடியும். படத்தை பார்க்காமல் எதிர்ப்பாகவோ ஆதரவாகவோ நான் கூற மாட்டேன். ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்திக்க வந்தால் அவரை நான் கண்டிப்பாக சந்திப்பேன். அவரும் ஜெயலலிதா, எம்ஜிஆரின் தொண்டர் தான்.

கடந்த கால தவறுகளை உணர்ந்து தற்போது துரோகத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போராடி வருகிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது. திமுக அரசு மதுவால் தள்ளாடுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் என்னென்ன பேசினாரோ அதையெல்லாம் தற்போது அமைச்சராக இருந்து கொண்டு செந்தில் பாலாஜி செய்யாமல் வெளியே வர மாட்டார்.

top videos

    திமுகவிற்கு ஸ்லீப்பர் செல் தேவை இல்லை. அனைவரும் நேரடியாக அவர்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஸ்லீப்பர் செல் தேவை. சமூகநீதி என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவரது அமைச்சர்கள்  செயல்பாடுகள் அது போன்று இல்லை’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: O Panneerselvam, TTV Dhinakaran